பலஸ்தீன அரசியலில் திடீர் திருப்பம் – பதவி விலகிய பிரதமர்
பலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, பலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளார்.
இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து கருத்துடன்பாடு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவம் தொடர் தாக்குதல்
பலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியிலுள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பலஸ்தீன நிர்வாகத்தில் புதிய திருப்பமாக, பலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார்.
காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், காசாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பலஸ்தீனியத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.