ஹீத்ரோ விமான நிலையத்தில் குடிவரவு மோசடி: இந்தியாவுக்கு தப்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிகாரி
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாற்றிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிகாரி ஒருவர் சுமார் 5 ஆண்டுகளாக குடிவரவு மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு தப்பியுள்ளதாக தகவல்
குறித்த நபர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவுக்கு தப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 24 வயதேயான அந்த நபர் இந்த மோசடி ஊடாக சுமார் 3 மில்லியன் பவுண்டுகள் (இந்திய பண மதிப்பில் ரூ 31.55 கோடி) திரட்டியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இவரை நாடும் வாடிக்கையாளரிடம் இருந்து ஒவ்வொருமுறையும் 25,000 பவுண்டுகள் வசூலித்ததுடன், எந்த விசா ஆவணங்களும் இன்றி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க அனுமதித்துள்ளார் என்றும் தெரிய வருகிறது.
தற்போது இந்தியாவில் தலைமறைவாகியுள்ள அந்த நபரை கைது செய்யும் பொருட்டு, அங்குள்ள அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவருடன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாற்றிய இன்னொரு ஊழியரும் இந்தியாவில் தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த 24 வயது நபரை நாடிய பலரும் இந்திய வாடிக்கையாளர்கள் என்றே நம்பப்படுகிறது.
தற்காலிக வருகையாளர் விசாவில் லண்டன் ஹீத்ரோவில் தரையிறங்கும் தமது வாடிக்கையாளர்களை, நாட்டின் வேறு பகுதிக்கு எந்த ஆவணங்களும் இன்றி பயணிக்க அனுமதித்துள்ளார்.
ஜனவரி 6 ஆம் திகதி கைது
மட்டுமின்றி, புலம்பெயர் கோரிக்கை நிராகரிக்கபப்ட்டு, சொந்த நாட்டுக்கு வெளியேற்றப்படும் சிக்கலில் இருப்பவர்களும் இந்த நபரின் சட்டவிரோத சேவையை நாடியுள்ளனர்.
கனேடிய அதிகாரிகளே முதலில் இந்த முறைகேடு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ரொறன்ரோ அல்லது வான்கூவர் செல்லும் BA விமானங்களில் பயணிப்பவர்கள் உடனடியாக புலம்பெயர் அந்தஸ்து பெற்றுவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் அனைவரும் ஒரே நபரால் உறுதி செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த நபர் ஜனவரி 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த நிலையிலேயே அவர் இந்தியாவுக்கு தப்பியதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அவர் குடியிருப்புகள் பல வாங்கியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.