கிலோ ரூ.25 – மலிவு விலையில் ‘பாரத் அரிசி’ விற்பனைக்கு வருவதாக தகவல்
நாட்டில் அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில் ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மலிவு விலையிலான அரிசியை அறிமுகம் செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்.
அந்த வகையில் பாரத் அரிசியின் விலை கிலோ ரூ.25 என இருக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் டால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே பாணியில் பாரத் அரிசி விற்பனை செய்யப்படும் என தகவல்.
அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NCCF), கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்திய அளவில் அரிசியின் சராசரி விலை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ள காரணத்தால் ‘பாரத் அரிசி’யை அரசு கொண்டு வர உள்ளதாக சொல்லப்படுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை நிலைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு கொண்டு வருகிறது. அந்த வகையில் பாசுமதி அல்லாத அரிசி வகை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.