யாகசாலையாக மாறிய பெண்களின் சபரிமலை – லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட ஆற்றுகால் பொங்காலை விழா!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பொங்காலை வழிபாடு ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடைபெறுகிறது.
பொங்காலை தினத்தில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வதால் பெண்களின் சபரிமலை என இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது.
மதுரையில் கோவலனுக்கு அநீதி இழைத்துக் கொலைசெய்த பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு சிலம்பெடுத்துச் சென்றார் கண்ணகி தேவி. பாண்டிய மன்னனை வதம் செய்துவிட்டு சினம் தணியாமல் தெற்கு நோக்கிச் சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறியிருக்கிறார் கண்ணகி தேவி.
அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வத்தை ஆற்றுபடுத்திக் குடியிருத்திய திருத்தலம் ஆற்றுகால். ஆற்றுகாலில் பகவதி அம்மனாக மக்களுக்கு அருள்பலித்து வருகிறார் கண்ணகி தேவி.
பண்டார அடுப்பில் தீ மூட்டல்இந்த ஆண்டு ஆற்றுகால் பொங்காலை விழா கடந்த 17-ம் தேதி காப்புகட்டி குடியிருத்தலுடன் தொடங்கியது.
தினமும் கண்ணகி தேவியின் வரலாற்றுக் காவியம், ‘தோற்றம் பாட்டு’ என்ற தலைப்பில் பாடப்பட்டு வந்தன. கண்ணகி தேவியிக்கும் கோவலனுக்கு திருமணம் நடப்பது, கோவலன் சிலம்பு விற்கச் செல்லுதல், கள்வன் எனப் பட்டம் சூட்டி, கோவலனைக் கொலை செய்தல்.
கண்ணகி சிலம்பெடுத்து பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கச் செல்வது ஆகியவை கடந்த 8 நாள்களாகத் தோற்றம் பாட்டில் பாடப்பட்டன. ஒன்பதாம் நாள் விழாவில் பாண்டிய மன்னனை கண்ணகி தேவி உக்கிரத்துடன் வதம் செய்யும் நிகழ்வு தோற்றம்பாட்டாகப் பாடப்பட்டது.