மெரீனாவில் கலைஞர் நினைவிடத் திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பு!
சென்னை மெரீனா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும் கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3ம் நாள் மறைந்த பின் அவருக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதற்கான நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றிருக்கும் நிலையில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கலைஞர் நினைவிடத் திறப்பு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டுள்ளார்.