இன்று கோவையில் போக்குவரத்து மாற்றம்..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணத்தை தொடங்கி உள்ளார். இந்த நடைபயணம் நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிறைவு பெறுகிறது. இந்த பாதயாத்திரை நிறைவு விழாவை நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டமாக நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக 1300 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.
இதனால் சம்பந்தப்பட்ட இடங்களில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஆளில்லா விமானங்கள் அதாவது ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரென்டன்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவை சூலூர் மற்றும் பல்லடம் வருவதையொட்டி காலை 06.00 மணி முதல் மாலை வரை கனரக வாகனங்களுக்கு மட்டும் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
1) பாலக்காட்டிலிருந்து வாளையார் வழியாக வரும் தாராபுரம், திருச்சி செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மதுக்கரை, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.
2) கோவை மாநகருக்குள் இருந்து வரும் கனரக வாகனங்கள் சுங்கம் வழியாக பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.
3) கோவை மாநகர் சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, L&T Bye-pass, பட்டணம் பிரிவு, G-Square, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.
அல்லது
4) கோவை சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, நீலாம்பூர், அவினாசி சாலை, கருமத்தம்பட்டி, அவினாசி வழியே செல்ல வேண்டும்.
5) பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் கனரக வாகனங்கள் உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.
6) கருமத்தம்பட்டியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சூலூர் வழியில் செல்வதற்கு அனுமதி இல்லை. நீலாம்பூர், சிந்தாமணிபுதூர் சந்திப்பு, கற்பகம் கல்லூரி சந்திப்பு, பொள்ளாச்சி வழியே செல்ல அனுமதிக்கப்படும்.