கோவை பிரபல மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி சேவை அறிமுகம்..!
தாய்ப்பால் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து, புரத சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சத்து ஆகியவை இயற்கையாகவே கிடைக்கிறது. இத்தகைய நன்மைகளை கொண்ட தாய்ப்பால் போதிய அளவு கிடைக்காத குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட வருகிறது. இந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டி இணைந்து தாய்ப்பால் வங்கி சேவையை ஆரம்பித்துள்ளது. இதன் துவக்க விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ டி.லட்சுமி நாராயணசுவாமி கலந்து கொண்டு தலைமையாற்றினார்.
இவ்வாறு பச்சாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி சேவை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தாய்ப்பால் வற்றிய தாய்மார்களின் குழந்தைகளுக்கும், பிரசவத்தில் தாயை இழந்த குழந்தைகளுக்கும் தாய்ப்பாலை தானமாக கொடுக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த வங்கியின் மூலம் சேகரிக்கப்படும் தாய்ப்பால் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நெக்டார் ஆஃப் லைஃப் மையத்திற்கு முதலில் அனுப்பப்படும். பிறகு அங்கு ஸ்கிரீனிங் மற்றும் பாஸ்டுரைசேஷன் ஆகிய சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு பாதுகாக்கப்படும் தாய்ப்பால் தேவை உள்ள நபர்களுக்கு மருத்துவமனைகள் வாயிலாக அனுப்பப்படும். இதன் சேவை 24 மணி நேரமும் வழங்கப்படும். இதுவரை இந்த வங்கியின் மூலம் 9 லட்சம் மி.லி தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு 8.5 லட்சம் மி.லி தாய்ப்பால் கோவை பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.