நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவு: இனி காலிமனைகளை பத்திரம் செய்ய வரும் நபர்கள்…

நகராட்சி நிர்வாக துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, விவசாயத்துக்கு என பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் காலிமனைகளைத் தவிர்த்து அனைத்து காலிமனைகளுக்கும் சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், காலி மனைகளாக இருந்தால் அவற்றுக்கும் வரி விதிப்பு செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பாலான மாநகராட்சிகளின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் காலிமனைகளுக்கு வரி விதிக்காமல் நிதி இழப்பு ஏற்படுவதாகத் தெரியவருகிறது. எனவே, காலிமனை வரி விதிப்பு செய்ய பல்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மனைப் பிரிவு அங்கீகாரம், அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகக் கட்டடங்கள் முதலிய கட்டுமானங்களுக்கு அனுமதி கோரி உள்ளூர் திட்டக் குழுமத்துக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வார்கள். அப்போது, நிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் அளவீடு செய்து காலிமனை வரி விதிக்கக் கூடாது. நில உரிமைதாரருக்குச் சொந்தமாக உள்ள மொத்த நிலப்பரப்புக்கும் காலி நிலவரி விதிக்கப்பட வேண்டும். விதிகளின்படி, காலியிட வரி விதிப்பு செய்த பின்னரே உள்ளூர் திட்டக் குழுமத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

கட்டட உரிமத்தை நீட்டிப்பு செய்யக் கோரும் விண்ணப்பதாரர்களும் தங்களுக்கான காலியிடங்களுக்கு உரிய வரியை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும். அத்தகைய கட்டடங்களுக்கு மட்டுமே உரிம நீட்டிப்புக்கான பரிந்துரையை உள்ளூர் திட்டக் குழுமம் வழங்க வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளை பத்திரம் செய்ய வரும் நபர்கள் வரக்கூடும். அவ்வாறு வந்தால், காலிமனை வரி விதிப்பு செய்த ரசீது பெற்ற பிறகே பத்திரங்களைப் பதிவு செய்து அளிக்க வேண்டும். அதுதொடர்பாக பதிவுத் துறை அலுவலகங்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *