காசோலை மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது
காசோலை மோசடி வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியனை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன், பிரபல நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்தபடத்துக்காக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ரூ.1.70 கோடி கடன்வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடனுக்காக காசோலை கொடுத்துள்ளார்.
அவரது வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் அந்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. இதையடுத்து கடன் கொடுத்த தரப்பினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பணத்தை கொடுத்துவிடுகிறேன் என நீதிமன்றத்தில் தெரிவித்தும் உறுதிஅளித்தபடி கொடுக்கவில்லையாம். இதையடுத்து, அவரை கைது செய்ய நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, சிவசக்தி பாண்டியனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.