இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் மீது மறைமுகமாக தாக்கிய ரோஹித் சர்மா? – என்ன சொன்னார் பாருங்க!
இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. குறிப்பாக, ஹைதராபாத் டெஸ்டில் தோற்றாலும், விசாகப்பட்டினம், ராஜ்கோட்டை தொடர்ந்து ராஞ்சியிலும் தனது வெற்றிக்கொடியை இந்தியா நிலைநாட்டியது. இதன்பின், வரும் மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் சம்பிரதாய டெஸ்ட் போட்டி தரம்சாலா நகரில் நடைபெறும்.
இந்த டெஸ்ட் தொடர் இளம் வீரர்களுக்கு பெரிய வாசலை திறந்துவிட்டிருக்கிறது எனலாம். யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில் ஆகியோருக்கு அணியில் ஏற்கெனவே நிலையான இடம் இருந்தாலும், அவர்கள் மீதான அழுத்தமும் அதிகம் இருந்தது. அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில், ரஞ்சி கோப்பையில் உச்சம் தொட்ட ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல், தேவ்தத் படிக்கல், ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பிசிசிஐ வாய்ப்பளித்தது.
இதில் ரஜத் பட்டிதாரை தவிர அனைவரும் ஓரளவுக்கு தங்களை நிரூபித்துவிட்டனர். தேவ்தத் படிக்கல் அடுத்த 5ஆவது போட்டியில்தான் இந்த தொடரில் முதல்முறையாக அறிமுகமாவார் எனலாம். இது வெறும் காலத்தின் கட்டாயம் என்றில்லாமல், உள்நாட்டு தொடரின் முக்கியத்துவத்தையும் இந்த தொடர் பலருக்கும் புரியவைத்தது எனலாம். சர்ஃபராஸ் கான் சுழலுக்கு எதிராக துணிச்சலாக விளையாடியதுதான் உள்நாட்டு தொடரில் ஜொலித்த வீரர்களுக்கே உண்டான தனி முத்திரை எனலாம்.
இதன் தொடர்ச்சியாக, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், பிசிசிஐ தலைமை ஆகியவை காயத்தில் இல்லாமலும், தேசிய அணியில் இல்லாமலும், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாவதை தவிர்த்து மற்ற அனைவரும் நிச்சயம் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் என உத்தரவு பறந்துள்ளது. குறிப்பாக, ஐபிஎல் தொடருக்காக டெஸ்ட் தொடரை இழக்கும் வீரர்கள் குறித்த கவலையையும் பிசிசிஐ பதிவு செய்தது.
குறிப்பாக, இஷான் கிஷன் தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி நாடு திரும்பிய பின் எவ்வித கிரிக்கெட்டையும் விளையாடவில்லை. எனவே, அவர் உள்பட இங்கிலாந்து தொடரில் இருந்து கழட்டிவிடப்ட்ட ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார் போன்றோரும் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்தது.
ஆனால் இவர்களில் யாரும் ரஞ்சி விளையாடவில்லை, இஷான் கிஷன் இதை தவிர்த்து ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறார். தனக்கு காயம் என ஷ்ரேயாஸ் கூறியபோது, அவருக்கு எவ்வித காயமும் இல்லை தேசிய கிரிக்கெட் அகாடமி கூறியது. எனவே, இருவரையும் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது ஒருபுறம் இருக்க கேப்டன் ரோஹித் சர்மா இந்த வெற்றி குறித்து கூறுகையில்,”பசியோடு இருப்பவர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்போம். இங்குள்ள அணியில் அந்தள நான் காணவில்லை..
இங்கு அணியில் இருக்கும் வீரர்களும், அணியில் இல்லாதவர்களும் விளையாட விரும்புகிறார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் விஷயம் என்னவென்றால், உங்களுக்கு வாய்ப்புகள் மிகக் குறைவுதான். நீங்கள் அவற்றைப் பயன்படுத்தாவிட்டால், அவை போய்விடும். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள புதிய வீரர்களுக்கு அடிக்கடி ஆலோசனைகள் தேவையில்லை, அவர்கள் சிறந்து விளங்குவதற்கு ஆதரவான சூழல் மட்டுமே தேவை” என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.