மலச்சிக்கல் பாடாய் படுத்துதா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க, நிச்சயம் உதவும்
இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே இருக்கும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக பல உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மலச்சிக்கலும் ஒன்று. மலச்சிக்கலால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது பலரிடம் பரவலாக காணப்படுகின்றது.
மலச்சிக்கலை (Constipation) சாதாரணமாக எடுத்துக் கொண்டால் அது நாளடைவில் மிகப்பெரிய உடல்நல உபாதையாக உருவெடுக்கலாம். உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளாமல், கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் நாம் அதிகம் உட்கொள்வது இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகின்றது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் இருந்தால் அது குடலிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மலச்சிக்கலுக்கான காரணம் என்ன? (Reasons for Constipation)
– மலச்சிக்கலுக்கான முக்கியமான காரணம் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் இருப்பதாக கருதப்படுகின்றது.
– போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது.
– நம் உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாமல் இருப்பது.
– போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது.
மலச்சிக்கல் நிவாரணம் காண உதவும் சில வீட்டு வைத்தியங்கள்
சூடான பால்
மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் சூடான அல்லது வெதுவெதுப்பான பாலில் (Milk) நெய் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெறலாம். இதை தினமும் சரியான முறையில் செய்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து நிரந்தரமாக நிவாரணம் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு
மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் எலுமிச்சை சாறு (Lemon Juice) எடுத்துக் கொள்ளலாம். தினமும் காலை வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். நாளடைவில் குடல் சுத்தம் செய்யப்பட்டு மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும். எலுமிச்சை மட்டும் இன்றி ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களும் இதற்கு தீர்வாக அமைகின்றன.
ஓமம் மற்றும் சீரகம்
மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து தீர்வு காண சீரகத்தை (Cumin Seeds) லேசாக வறுத்து ஓமத்துடன் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். தினமும் காலையில் இந்த பொடியை நீரில் கலந்து குடிக்கவும். அப்படி தினமும் செய்து வந்தால் சில நாட்களில் தீர்வு கிடைக்கும்
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் (Guava) அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. குடலை சுத்தம் செய்யும் பண்புகளும் இதில் உள்ளன. தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்
உலர் திராட்சை
உலர் திராட்சை (Raisins) மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது மலம் எளிதாக உடலை விட்டு வெளியேற உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் உலர் திராட்சையை அப்படியே சாப்பிடலாம். அல்லது அதை ஊற வைத்து அதன் பிறகு உட்கொள்ளலாம், இதன் கண்ணீரையும் குடிக்கலாம்.