எலெக்ட்ரிக் கார்களை வாங்கவே அதிகம் ஆர்வம் காட்டும் இந்தியர்கள்? ஏன் தெரியுமா?
சமீப வருடங்களாகவே இந்திய வாடிக்கையாளர்களிடத்தில் புதிதாக கார் வாங்குவதில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது ஒரு கணக்கெடுப்பு வெளியாகியுள்ளது. பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்கள் வழக்கமான பெட்ரோல்/டீசல் கார்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வகை கார்களையே அதிகம் விரும்புவதாக இந்த கணக்கெடுப்பு கூறுகிறது. குறிப்பாக இந்த ஆய்வில் பங்கற்றவர்களில் 24 சதவிகிதத்தினர், தங்களது அடுத்த வாகனம் ஹைபிரிட் எலெக்ட்ரிக் காராகத்தான் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
கார் வாங்க வேண்டுமென முடிவெடுப்பதில், அதன் விலை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏறக்குறைய 80 சதவிகிதத்தினருக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விலையுள்ள கார்களை வாங்கவே பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விலையுள்ள பெட்ரோல்/டீசல் கார்களை வாங்க 59 சதவிகிதத்தினரும், அதே விலையிலுள்ள எலெக்ட்ரிக் கார்களை வாங்க 58 சதவிகிதத்தினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள பெட்ரோல்/டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை வாங்க முறையே 23% மற்றும் 22% வாடிக்கையாளர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எலெக்ட்ரிக் வாகனம் வாங்குவதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையே என கணக்கெடுப்பில் பங்கேற்ற 68 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். எரிபொருளுக்கு ஆகும் செலவு குறையும் என 66 சதவிகித வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். எலெக்ட்ரிக் வாகனம் அதிகமாக விற்பனை ஆக வேண்டுமென்றால் அதற்குறிய சார்ஜிங் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் அதிகப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
எனினும் ஆய்வில் பங்கேற்ற 66 சதவிகிதத்தினர் தங்களது வீட்டிலேயே சார்ஜ் போட்டுக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளனர். வெறும் 22 சதவிகிதத்தினர் மட்டுமே சார்ஜிங் நிலையங்களை விரும்புகிறார்கள். பெரும்பாலானோர் விரைவாக சார்ஜ் ஏறுவதையே விரும்புகிறார்கள். அதேப்போல் இதற்காக செலுத்த வேண்டிய கட்டண முறை எளிமையான கிரெடிட்/டெபிட் பேமெண்ட் வசதியாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களின் விருப்பமாக உள்ளது.
சார்ஜ் ஏறுவதற்கு அதிக நேரமாகுதல், பேட்டரியின் பாதுகாப்பு, குறைவான சார்ஜிங் நிலையங்கள் எனப் பல சவால்கள் இருந்தாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஹைபிரிட் தொழில்நுட்பம் உள்ள கார்களையே விரும்புகிறார்கள். அதேப்போல் முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் இப்போதுள்ள வாடிக்கையாளர்கள் அறிவார்ந்தவர்களாக இருப்பதாகவும் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என அதிக தொழில்நுட்ப வசதிகள் உள்ள கார்களை வாங்கவே ஆர்வம் காடுவதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுதவிர செலவை குறைக்கவும் தங்கள் வசதிக்காகவும் கார் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக இன்சூரன்ஸ் எடுக்க 83 சதவிகித வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். சிறந்த ஓட்டுனர் அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காகவும் முழுமையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தங்களது தனிப்பட்ட தகவல்களை கார் உற்பத்தியாளர்களிடம் கொடுக்கவும் வாடிக்கையாளர்கள் தயாராக உள்ளனர் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள உண்மைகள்.