பிரசாந்த், பிரதாப், கிருஷ்ணன், சவுகான்… ககன்யான் விண்வெளி பயணத்துக்குத் தயாராகும் வீரர்கள் இவங்கதான்!
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தை 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் பெயர்கள் சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அவர்கள் யார் யார் என்று தெரியவந்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள் விங் கமாண்டர்கள் அல்லது குழு கேப்டன்கள் என்று கூறப்படுகிறது பிரசாந்த் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் சவுகான் என்ற பெயர்கள் தெரியவந்துள்ளன. ஆனால், இவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.
பெங்களூரில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் நால்வரும் செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இருப்பார்கள். அங்கு அவர்களை பிரதமர் மோடி உலகுக்கு அறிமுகப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
ககன்யானுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விண்வெளி வீரர்களும் சோதனை விமானிகளாக இருப்பார்கள் என்று கடந்த 2019ஆம் ஆண்டு தெரிவித்தது. முதல் முறை மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணம் இதற்காக இஸ்ரோ பல ஆய்வுகளைச் செய்து வருகிறது.
பெங்களூரில் செப்டம்பர் 2019 இல் முடிக்கப்பட்ட இத்திட்டத்திற்கான முதல் நிலை விண்வெளி வீரர்கள் தேர்வில் 12 பேர் தகுதி பெற்றனர். இந்திய விமானப்படையின் கீழ் வரும் ஏரோஸ்பேஸ் மெடிசின் நிறுவனத்தில் தேர்வு நடைபெற்றது. பல சுற்று தேர்வுகளுக்குப் பிறகு, இறுதியாக நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இஸ்ரோ நான்கு பேரையும் ஆரம்பப் பயிற்சிக்காக ரஷ்யாவிற்கு அனுப்பியது. கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக பயிற்சியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. 2021 இல் அந்தப் பயிற்சி முடிக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.