ரிசர்வ் வங்கி அதிரடி.. பொசுக்குன்னு ரூ.3 கோடி அபராதம்.. சிக்கியது SBI..!
ரிசர்வ் வங்கி நாட்டின் அனைத்து வங்கி, கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், NBFC-க்கள், பின்டெக் நிறுவனங்கள் என அனைத்திலும் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. சமீபத்தில் ஆர்பிஐ பிடியில் சிக்கிய பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி இதற்கு முக்கியமான உதாரணம்.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறை மீறல்களுக்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கி ஆகிய மூன்று வங்கிகள் மீது 3 கோடி ரூபாய் வரையிலான அபராதம் விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆர்பிஐ வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, 2014ஆம் ஆண்டின் டெபாசிட்டர் எடுகேஷன் அவேர்னஸ் நிதி திட்டம் தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா-வுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து சிட்டி யூனியன் வங்கி-க்கு, கடன் வகைப்படுத்தல் தொடர்பான விதிமுறைகள் மற்றும் வாடிக்கையாளர் அறிவியல் நடைமுறைகள் குறித்து ஆர்.பி.ஐ வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றாததற்காக ரூ.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கிக்கு ரூ.32.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒடிசா மாநிலம் ருர்கேலாவில் உள்ள ஓஷன் கேப்பிட்டல் மார்க்கெட் நிதி நிறுவனத்திற்கு, ஒழுங்குமுறை விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் அனைத்தும் விதிமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டே 3 கோடி ரூபாய் மதிப்பிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த அபராதம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்கள், நிதி பரிமாற்றங்கள் குறித்து இல்லை என்பதையும் ஆர்பிஐ விளக்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் இருந்து non-executive chairman பதவியில் இருந்தும், நிர்வாகக் குழுவில் இருந்தும் பேடிஎம் நிறுவனர் விஜய் ஷேகர் ஷர்மா திங்கட்கிழமை விலகினார்.
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய UPI கட்டண செயல்பாட்டு நிறுவனமான பேடிஎம், அதன் UPI பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யெஸ் வங்கி ஆகிய வங்கிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள இருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.