BSNL: Jio, Airtel-க்கு இணையாக வளர ‘புது’ திட்டம்.. ஊழியர்களுக்கு பாதிப்பா..?!
BSNL நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் உடன் போட்டியிட, அதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று அதன் பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபகரமான நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், தற்போது நெட்வொர்க் மேம்பாடு, ஊழியர் செலவை ஒழுங்கு முறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விற்பனை மற்றும் விநியோகத்தை மேம்படுத்துதல், மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் தற்போது மத்திய அரசு எடுக்கத் தயாராகி வருகிறது. நஷ்டத்தில் இயங்கும் இந்த பொதுத்துறை நிறுவனமான BSNL, தனியார் போட்டியாளர்களுடன் போட்டியிடவும், லாபகரமான நிலைக்குத் திரும்பவும் செலவைக் குறைப்பது அவசியம், அதிலும் குறிப்பாக ஊழியர்களின் செலவுகளைக் குறைப்பது அவசியம் என BSNL அதிகாரி ஒருவர் ஈடி பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.
“ஊழியர் செலவுகளை பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிட்டு, அதற்கேற்ப குறைக்க வேண்டும்,” என்று பிஎஸ்என்எல் அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு 78,323 பேர் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற போதிலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாளர் செலவு இன்னும் மிக அதிகமாகவே உள்ளது. 2022-23 நிதியாண்டில், மொத்த வருவாயில் ஊழியர் செலவு 38.4% ஆக இருந்தது.
“இது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாக உள்ளது,” என்று பிஎஸ்என்எல் அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார். தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சுமார் 59,000 பேர் பணியாற்றுகின்றனர்.
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் ஊழியர் செலவு அதன் வருவாயில் சுமார் 1.8% ஆகவும், பார்தி ஏர்டெல்லின் ஊழியர் செலவு 2.3% ஆகவும் உள்ளது. நிதி சிக்கலில் சிக்கித் தவிக்கும் வோடாபோன் ஐடியாவின் ஊழியர் செலவு அதன் வருவாயில் 4% ஆக உள்ளது.
2019ஆம் ஆண்டின் புத்துணர்வுத் திட்டத்திற்கு முன்பு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஊழியர் செலவு 70% க்கும் அதிகமாக இருந்தது. தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்குப் பிறகு ஊழியர் செலவு குறைந்திருந்தாலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஒப்பிடும்போது இன்னும் அதிகமாகவே உள்ளது. இது நிறுவனத்தின் லாபத்தைப் பாதிக்கிறது என்று பிஎஸ்என்எல் அதிகாரி தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் வரை சுமார் 9.2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் இதுவரை 4 ஜி சேவைகளைத் தொடங்கவில்லை. ஆனால் தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவையில் அதிகப்படியான வருவாய் பெற துவங்கியுள்ளது.