கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்த படம்.. முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல தமிழ் இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, ரஜினி உடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்தார்.
சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.
மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: தமிழ் பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த அவருக்கு மாமன்னன் திரைப்படம் மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்தது. லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு ரகுதாத்தா என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. அதன் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் ஹிந்தி தொடர்பான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. கடைசியாக சைரன் படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.
தேசிய விருது: இதற்கிடையே நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
முதலில் அந்த நடிகை தான்: இந்நிலையில் நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக இன்னொரு நடிகை நடிக்கவிருந்தது தெரியவந்திருக்கிறது. அதன்படி அந்தப் படத்தில் நடிக்க முதலில் படக்குழுவானது நடிகை நித்யா மேனனிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தியதாம். ஆனால் சம்பளம் உள்ளிட்ட காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு அடுத்ததாக அமலா பாலை நடிக்க வைக்கலாம் என்று படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் முடிவு செய்திருந்தார். ஆனால் லுக் டெஸ்ட்டில் கீர்த்தி சுரேஷ் செட் ஆனதால் அவரையே நடிக்க வைத்துவிட்டார்கள்.