ரகசியம் வெளியீடு.. இந்த 4 பேருதான் விண்வெளி போகும் இந்தியர்கள்.. அறிமுகம் செய்த பிரதமர் மோடி!

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டில் 4 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பி 3 நாட்கள் ஆய்விற்கு பின் மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வருவதே நோக்கமாகும். இதற்காக இந்திய விமானப்படை மற்றும் இஸ்ரோ இணைந்து முதலில் 12 பேரை தேர்வு செய்து, பல கட்ட சோதனைக்கு உட்படுத்தி அவர்களில் இருந்து 4 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஒரு நாள் பயணமாக கேரள மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கேரள மாநில ஆளுநர் ஆரீப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன், இஸ்ரோ தலைவர் சோமநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி உள்ளிட்ட விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

அப்போது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ககன்யான் திட்டத்தில் குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷூ சுக்லா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களுக்கு பதக்கம் அணிவித்து வாழ்த்தும் தெரிவித்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்த 4 வீரர்களும் சாதாரண மனிதர்கள் அல்ல, 140 கோடி இந்தியர்களின் கனவுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் போகும் நான்கு சக்திகள் என்று குறிப்பிட்டார். ரஷ்யா மூலம் ராகேஷ் சர்மா விண்வெளிக்கு பறந்ததை நினைவுக்கூர்ந்த பிரதமர், 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை நேரமும் நமதே, கவுண்டவுன் நமதே, ராக்கெட்டும் நமதே என்று கூறினார்.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. விண்வெளி செல்வதற்காக தேர்தெடுக்கப்பட்ட 4 வீரர்களும் ரஷ்யாவில் 13 மாதங்கள் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *