அம்பானி வீட்டு திருமணம்: தடபுடலான சமையல்.. வகைவகையாக எத்தனை ஐட்டம்..!
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரென் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதற்கு முன்னதாக இந்த திருமணத்துக்கான முன்வைபோகங்கள் மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்காக இப்போது இருந்தே அதிசிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல பிரபல விளையாட்டு வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த வைபோகங்களை எதிர்பார்த்து ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சென்ட்டும் பரவசத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெறவிருக்கும் திருமண முன்வைபோக நிகழ்ச்சிக்காக இந்தூரில் இருந்து 65 சமையல் கலைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த விழாவுக்காக பார்ஸி உணவு, தாய், மெக்ஸிகன், ஜப்பானிய, பான் ஏஷியா உணவுப் பொருட்கள் பரிமாறப்பட உள்ளன. தினமும் மதியம் 225 வகையான பதார்த்தங்களும், இரவு விருந்துக்கு 275 வகையான உணவுகளும், காலை சிற்றுண்டிக்கு 75 வகையான உணவுகளும், நள்ளிரவு விருந்துக்கு 85 வகையான உணவுகளும் சமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் நள்ளிரவு விருந்து உணவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை பரிமாறப்படும். ஒரு நிகழ்ச்சியில் ஒரு பரிமாறப்பட்ட உணவு மீண்டும் வேறு நிகழ்ச்சிகளில் இடம் பெறக்கூடாது என்பதில் முகேஷ் அம்பானி திட்டவட்டமாக உள்ளது.
இந்த விழாவில் உணவுக்கு மிகவும் முக்கியத்துவத்தை அவர் தந்துள்ளார். மகனின் திருமணச் சாப்பாட்டை ஊரையே வியக்க வைக்கும் அளவுக்கு செய்து பரிமாற வேண்டும் என்று முகேஷ் அம்பானி விரும்புகிறார்.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு தனித்துவமான ஆடைகள் ஸ்டைலும் வகுக்கப்பட்டுள்ளது. முதல் நாளில், விருந்தினர்களுக்கு ஒரு காக்டெய்ல் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது ‘ஆன் ஈவினிங் கல எவர்லேண்ட்’ என்று அழைக்கப்படுகிறது. அதற்கான டிரஸ்கோட் நேர்த்தியான காக்டெய்ல் டிரெஸ். வெளிர் மற்றும் சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் கண்களை உறுத்தாத நிறத்தில் அவை இருக்கும்.
இரண்டாவது நாளின் தீம், ‘எ வாக் ஆன் தி வைல்ட்சைடு’ ஜாம்நகரில் உள்ள வனப் பராமரிப்பு மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்போது வசதியான ஆடைகள் மற்றும் காலணிகளை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாலையில் விருந்தினர்கள் ‘மேளா ரூஜ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள், அங்கு அவர்கள் பாரம்பரிய இந்திய ஆடைகளை அணிவார்கள். மூன்றாவது நாளான மார்ச் 3 ஆம் தேதியன்று விருந்தினர்கள் இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் ‘ஹஸ்தக்ஷர்’ என்ற தீமில் கொண்டாடுவர்.