தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் தயாரிக்கும் கார் இதுதான்.. டிசைனே வித்தியாசமா இருக்கே..!
வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான வின்பாஸ்ட், இந்திய சந்தையில் தனது விரிவாக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், தனது சமீபத்திய கண்டுபிடிப்பான VF3 மைக்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி-யை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, வின்பாஸ்ட் நிறுவனம், இந்தியாவில் VF3 க்கான காப்புரிமைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது.
இது இந்தியாவின் வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன துறையில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த நிறுவனம் எடுத்து வரும் முயற்சிகளை வெளிப்படுத்துகிறது.
2024 லாஸ் வேகாஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட வின்பாஸ்ட் VF3 எலக்ட்ரிக் எஸ்யூவி, குறுகலான ஆனால் வலுவான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் நீளம் 3,190 மிமீ, அகலம் 1,679 மிமீ, உயரம் 1,620 மிமீ ஆகும்.
உயரமான மற்றும் பெட்டி போன்ற வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான இரண்டு கதவு அமைப்புடன் இருக்கும் VF3 காப், மைக்ரோ எஸ்யூவி பிரிவில் அறிமுகமாக உள்ளது.
எலக்ட்ரிக் கட்டமைப்பு பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், VF3 ஒரே எலக்ட்ரிக் மோட்டார் அமைப்புடன், ஒருமுறை சார்ஜில் 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த VF3 கார், Eco மற்றும் Plus என இரு வகைகளில் கிடைக்கும். இந்த வகைகள் ஒரே எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பைக் கொண்டிருக்கும், மேலும் சிக்கனத்தையும் செயல்திறனையும் ஒருங்கிணைத்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வின்பாஸ்ட் தனது முதல் ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவும் பணிகளைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக தொழிற்சாலை (SIPCOT) தொழில் வளாகத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த ஆலைக்கு ஐந்து ஆண்டுகளில் ₹ 500 மில்லியன் (ரூ. 4,165 கோடி) முதலீடு செய்யப்பட உள்ளது.
ஆண்டுக்கு 150,000 வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலை, சுமார் 3,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்.