WPL 2024 : என்னங்க டெஸ்ட் மேட்ச்சா ஆடுறீங்க? தர்ம அடி வாங்கிய குஜராத்.. மெகா வெற்றி பெற்ற ஆர்சிபி
பெங்களூர் : 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை புரட்டி எடுத்து பெரிய வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
2024 மகளிர் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
குஜராத் அணியின் பெத் மூனி மற்றும் போப் லிட்ச்பீல்ட் என இரண்டு முக்கிய வீராங்கனைகளை ரேணுகா சிங் தனது இன்ஸ்விங்கர்களால் வீழ்த்தினார். அதன் பின் டெஸ்ட் போட்டி போல நிதான ஆட்டம் ஆடியது குஜராத் அணி. 10 ஓவர்களில் 50 ரன்களை கூட தாண்டவில்லை. இடையே விக்கெட்களும் சரிந்தன.
பின்னர் ஆறாம் வரிசையில் இறங்கிய ஹேமலதா 25 பந்துகளில் 31 ரன்கள் குவித்ததை அடுத்து அந்த அணி 100 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது குஜராத் அணி. ஒரு பந்துக்கு ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் திணறி இருந்தது அந்த அணி. பெங்களூர் அணியின் ரேணுகா சிங் 2, சோஃபி மோலினேக்ஸ் 3, ஜார்ஜியா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
அடுத்து சேஸிங் செய்த பெங்களூர் அணிக்கு அபார துவக்கம் அளித்தார் ஸ்மிருதி மந்தனா. அவர் 27 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். சோஃபி டெவின் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பின் மேகனா 36, எல்லிஸ் பெர்ரி 23 ரன்கள் குவிக்கவே பெங்களூர் அணி 12.3 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது பெங்களூர் அணி.
இந்த வெற்றியை அடுத்து பெங்களூர் அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடனும், 1.665 நெட் ரன் ரேட் உடனும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.