யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வர கூடாது..! அதுவும் திருமணமான மூன்றே மாதத்தில்..!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் அபிஷேக். 25 வயதான இவருக்கு கடந்த நவம்பர் மாதம் தான் அஞ்சலி (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சியாக தாம்பத்திய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், திருமணமாகி எங்கும் வெளியே செல்லாததால், டெல்லியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இருவரும் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று டெல்லி மிருகக்காட்சி சாலையில் இருவரும் சுற்றிப் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அபிஷேக் நெஞ்சை பிடித்தபடியே கீழே விழுந்தார். இதனால் பதறிப்போன மனைவி அஞ்சலி, பயத்தில் கூச்சலிட்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அபிஷேக் மாரடைப்பில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அஞ்சலி கதறி அழுதார். இதையடுத்து, இன்று காலை அபிஷேக்கின் இறுதிச்சடங்கு காசியாபாத்தில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த கட்டிடம் ஒன்றின் 7-வது மாடிக்கு சென்ற அஞ்சலி, அங்கிருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அஞ்சலி உயிரிழந்தார். திருமணமாகி இப்போது தான் வாழ்க்கையை ஆரம்பித்த தம்பதியருக்கு நேர்ந்த கதி உத்தரபிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.