ராணிப்பேட்டையில் நடந்த துயரம்..! இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த இளம்பெண்..!
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் அறிவழகன். இவர் ராணுவத்தி்ல் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கும் இவரது முதல் மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் அறிவழகன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்தப் தம்பதியினருக்கு ஜனுஷ்ஸ்ரீ(5 ), தரணிகா (3) என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அறிவழகனின் முதல் மனைவியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி ஆனதாக கூறப்படுகிறது.
இதனால் முதல் மனைவி விஜயலட்சுமி அறிவழகனுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதற்காக கூறி வேலம் கிராமத்துக்கு வந்துள்ளார் . இதனால் முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவி மற்றும் கணவர் அறிவழகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் மன அழுத்தத்திற்கு ஆளான வெண்ணிலா தனது இரு பெண் குழந்தைகளுடன் வேலம் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் முன்பாக தனது இரு குழந்தைகளையும் கைகளில் கெட்டியாக பிடித்துக்கொண்டு வாலாஜா ரயில் நிலையத்திலேயே தண்டவாளத்தில் இறங்கி கீழ நின்றுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திருவனந்தபுரம் விரைவு ரயில் மோதியதில் மூன்று பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவிய நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திருக்கு வெண்ணிலாவின் உறவினர்கள் விரைந்து வந்து உடல் சிதறி இறந்து கிடந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறினர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் இருந்த சக பயணிகளின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
காட்பாடி ரயில்வே காவல் துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தனது இரு பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலைய ரயில்வே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் மூன்று உயிர்கள் பலியாகி இருப்பதை தடுத்திருக்கலாம் என சக பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.