இன்று முதன்முறையாக நெல்லைக்கு வருகிறார் பிரதமர் மோடி..!
இன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பெல் மைதானத்தில் நடக்கும் பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் மாநகர பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. பிரமாண்ட மேடை அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் வந்து இறங்கும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள பொதுக்கூட்டம் மைதானத்திற்கு சென்றடைகிறார்.அங்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதற்காக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த நிலையில் முதல் முறையாக பிரதமர் நெல்லை மாநகர பகுதிக்கு வருகை தருவதையொட்டி மாநகர் பகுதி முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் மைதானம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளம் ஆகிய இடங்களில் பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது மாநகர் பகுதி முழுவதும் பிரதமர் வந்து செல்லும் நாள் வரை ட்ரோன் கேமராக்கள் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.