மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி சங்கஷ்டி சதுர்த்தி விரதம் இன்று! விநாயகர் வழிபாடு…

Spiritual information About Sanakarahara Chaturthi : இந்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் 28ம் நாளான இன்று சங்கடஹர சதுர்த்தி நாள் ஆகும். சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக நான்காம் நாள் சதுர்த்தி திதி,சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தி, சங்கஷ்டி சதுர்த்தி என்று அறியப்படுகிறது

சங்கடஹரன் சிவன் மைந்தன்

முழு முதற்கடவுள் என இந்துக்கள் வணங்கி வழிபடுபவர் சிவனின் மூத்த மைந்தன் கணபதி என்பது இந்து மத நம்பிக்கை. விநாயகர் என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள் சொல்லப்படுகிறது. விக்னங்களை, காரியத்தடைகளை ஏற்படாமல் காப்பாற்றும் விநாயகரே, அனைவராலும் தொழப்படும் தெய்வங்களில் முதன்மையானவர். நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் இலகுவாக முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது. அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கிறோம்.

சங்கடஹர சதுர்த்தி

சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு ‘சங்கட’மாக மருவி, பேச்சு வழக்கில் சங்கரஹர சதுர்த்தி என நிலைத்துவிட்டது

சங்கடஹர சதுர்த்தியன்று, இருள் கவியும் மாலை நேரத்தில் விநாயகரை வழிபடுவது சிறப்பு. நம்மை நோக்கி வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை எதிர்கொண்டு பாதுகாப்பதற்காக விநாயகரை வழிபடும் விரதம் என்று பெயர் பெற்றது சங்கடஹர சதுர்த்தி.

சங்கஹர சதுர்த்தி புராணம்

ஒருமுறை சந்திரனின் தவறான செயலுக்கு விநாயகர் கோபமடைந்தார். பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர், சந்திரனின் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகட்டும் என்றும், உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும் என்றும் கோபத்தில் சொல்லிவ்ட்டார். வானில் சந்திரன் மறைந்ததால் உலகின் சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், நிலவு வானில் தோன்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சந்திரனுக்கு சாப விமோசனம் தந்தருளுமாறு விநாயகரை வேண்டினார்கள். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விநாயகரும் சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டதோடு, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளை அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நிவர்த்தி செய்வதாகவும் வாக்களித்தார். அதன்படி, விநாயகருக்கு ஒவ்வொரு மாத சங்கட சதுர்த்தியன்றும் விரதம் இருந்து மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

சந்திரனுக்கு சாபவிமோசனம்

விநாயகரின் கோபத்தை உணர்ந்த சந்திரன், தன் தவறால் வருந்தி, விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். சந்திரனின் தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அருள்புரிந்து, தேயும் சந்திரன் வளர்வதற்கான வரத்தையும் கொடுத்தார். இப்படி சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினம் என்பதால், இன்று விரதம் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து, நல்ல வழி காட்டுவார் கணபதி என்பது இந்த நாளின் சிறப்பு ஆகும்.

ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வருகிறது. அன்று விரதம் இருந்து காரியத் தடைகளை நிவர்த்தி செய்து கொள்வோம். அதுமட்டுமன்றி, அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கும் இறைவனிடம் இருந்து மன்னிப்புப் பெறுவோம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை
சங்கடஹர சதுர்த்தியன்று நாளன்று, விரதம் இருப்பவர்கள் அதிகாலை யில் எழுந்து நீராடி, விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் விநாயகரை மனதில் நினைத்து விரதத்தைத் தொடங்கலாம்.

விநாயகப்பெருமானை நினைத்து விரதத்தை தொடங்கி இருக்கும் எனக்கு எந்த இடையூறும் விரதம் நிறைவேற அருள் புரி எனா கடவுளை பிரார்த்தித்து, நாள் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து மாலையில் விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் என உணவுப் பிரியர் கணபதிக்கு நிவேதனம் செய்யலாம். இரவில் சந்திரனை பார்த்து வணங்கிய பிறகு விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்ளலாம்.

உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை உண்டு விரதம் இருக்கலாம். கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். விநாயகர் அகவல், விநாயகர் புராணத்தை படிப்பதும் நன்மைகளை தரும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *