ED vs TN Police: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி காவல் நீட்டிப்பு

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காவல் வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை வழக்கு விசாரணையில் இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரை வழக்கில் இருந்து விடுவிக்க உதவுவதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ‌ரூ.3 கோடி லஞ்சம் கேட்டதாகவும், ஆனால், மருத்துவர் சுரேஷ் பாபு தரமறுக்கவே, கண்டிப்பாக ரூ. 51 லட்சமாவது அன்பளிப்பாகத் தரவேண்டும் எனக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி அன்று திண்டுக்கல் – நத்தம் சாலையில் வைத்து ரூ.20 லட்சத்தை மருத்துவர் சுரேஷ் பாபு கொடுத்துள்ளார். இதனை அடுத்து கடந்த நவம்பர் 30ஆம் தேதி இரவு மீதி பணம் ரூ.31 இலட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் வெறுத்துப்போன மருத்துவர் சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து டிசம்பர் 1ஆம் தேதி அன்று ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பினர்.

பின் மருத்துவர் சுரேஷ் பாபு, திண்டுக்கல் தோமையார்புரம் அருகே நின்றுகொண்டு இருந்த அமலாக்கத்துறை அதிகாரியின் காரில் பணத்தை வைத்து உள்ளார். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி காரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரட்டிச்சென்று கொடைரோடு டோல்கேட் அருகில் மடக்கிப் பிடித்து கைது செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளித்தது.

இதனை தொடர்ந்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி சென்றனர். முன்னதாக சோதனை நடத்த சென்ற காவல் துறையினரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர் முதலில் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

இந்த நிலையில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தாக கூறி மதுரை தல்லாகுளம் போலீசார் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரை கடந்த 14ந் தேதி கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலின் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருடைய ஜாமின் மனுவை மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் நேற்று காணொலிக்காட்சி மூலம் திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை 11ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி மாஜிஸ்திரேட்டு பிரியா உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *