முதல்ல சுந்தர் பிச்சையை டிஸ்மிஸ் செய்யணும்.. சமீர் அரோரா டிவீட்டால் அதிர்ச்சி..!!
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, ஜெமினி செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தொடர்பான பிரச்சனைகளுக்குப் பொறுப்பேற்று விரைவில் பதவி நீக்கம் செய்யப்படலாம் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஹேலியோஸ் கேப்பிட்டல் நிறுவனர் சமீர் அரோரா கருத்துத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளமான X-இல், கூகுள் உலகளவில் வெளியிட்ட செயற்கை நுண்ணறிவு சேட்பாட் ஜெமினி சார்ந்த சர்ச்சைகள் குறித்துச் சமீர் அரோரா-வை டேக் செய்து ஒரு பயனர் கேள்வி கேட்டார்.
72TJMaxx என்ற போலியான பெயர் கொண்ட ஒருவர், சமீர் அரோரா பதிவில், சார் கூகுள் ஜெமினி பாத்தீங்களா? அது வெள்ளையர்களின் இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. சுந்தர் பிச்சை அதிர்ஷ்டசாலி, அவர் வெள்ளையாக இல்லை எனப் பதிவிட்டார்.
அதற்குப் பதிலளித்த சமீர் அரோரா, “என் கணிப்பின்படி, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது ராஜினாமா செய்வார் – அதுவே சரியானது. செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணியில் இருக்கும் வேளையில், முழுமையாகத் தோல்வியடைந்துள்ளார். சுந்தர் பிச்சை வெளியேறிய பின்பு மற்றவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீர் அரோரா, சொத்து மேலாண்மை நிறுவனமான ஹேலியோஸ் கேப்பிட்டல் நிறுவனர் ஆவார், 1998 முதல் முதலீட்டுத் துறையில் பல முக்கிய நிறுவனத்தில், பல உயர் பதவிகளில் இருந்துள்ளார். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்களை ராஜினாமா செய்யக் கூறியது டெக் வல்லுனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
ஜெமினி ஏஐ அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டு உள்ளது. ஜெமினி AI-யின் AI image-generator சேவை “பன்முகத்தன்மை இல்லாத நிலையில் அதை ஈடுசெய்யும் முயற்சியில், சில சமயங்களில் அர்த்தமற்ற முறையில் பதில்களை அளித்து வந்தது. கூகுள் இந்தக் குறைபாட்டை ஒப்புக்கொண்டு பிப்ரவரி 23 அன்று கூகுள் மன்னிப்பு கேட்டது.
இந்தப் பிரச்சனைகளைச் சரி செய்யும் வகையில், ஜெமினி AI-யின் AI image-generator சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கூகுள் சர்ச் மற்றும் பிற வணிகங்களை மேற்பார்வையிடும் மூத்த துணைத் தலைவர் பிரபாகர் ராகவன் ஒரு வலைப்பதிவில், இந்த இமேஜ் உருவாக்கும் அம்சம் அதன் இலக்கை சரியாக அடைய முடியாமல் தவறிவிட்டது, மேலும் தவறான மற்றும் மனம் புண்படுத்தும் படங்களுக்குக் காட்டியதற்கு மன்னிப்பு கேட்டார், மேலும் பயனர் கருத்துக்கு நன்றி தெரிவித்தார்.
ஜெமினி AI-யின் AI image-generator சேவை, ஒரு கருப்பின பெண்ணை அமெரிக்காவின் ஸ்பான சந்தை (Founding Father) ஆகவும், ஆசிய மக்களை நாஜி யுக ஜெர்மன் ராணுவ வீரர்களாகவும் சித்தரித்து காட்டியது.