இந்த வியட்நாம் நிறுவனம் இவ்ளோ பெரிய பிளானோடவா தமிழ்நாடு வந்திருக்கா! ஓலா, டிவிஎஸ்ஸையும் விடாது போலையே!

வியட்நாமைச் சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் வின்ஃபாஸ்ட் (VinFast). இந்த நிறுவனம் இந்தியாவில் வெகு விரைவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையானது தமிழ்நாட்டிலேயே அமைகின்றது. இதன் கட்டுமான பணிகள் சமீபத்திலேயே தொடங்கப்பட்டன. சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஆலை தூத்துகுடியில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

வின்ஃபாஸ்ட் ஓர் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். ஆகையால், இந்த நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தியில் மட்டுமே ஈடுபடும் என எண்ணப்பட்டது. ஆனால், அது அதன் எலெக்ட்ரிக் டூ-வீலர்களையும் விற்பனைக்குக் களமிறக்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. சமீபத்தில் அந்த நிறுவனம் ஓர் அழகிய விண்டேஜ் லுக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பேடண்டை பதிவு செய்ததன் வாயிலாகவே இந்த தகவல் உறுதியானது.

நிறுவனம், கிளாரா எஸ் (Klara S) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பேடண்ட் பதிவையே தற்போது செய்திருக்கின்றது. இது ஓர் ஹப் மோட்டார் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் தோற்றம் விண்டேஜ் லுக் கொண்ட அனைத்து விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் உள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் ஆகியவற்றிற்கு மிகப் பெரிய போட்டியாளனாக இதன் வருகை இருக்கும் என தெரிகின்றது. இதுமட்டுமில்லைங்க, பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு எதிராளியாகவும் இதன் வருகை இருக்கும் என கூறப்படுகின்றது. இந்தியாவில் தற்போது பெட்ரோல் எஞ்சின் கொண்ட டூ-வீலர்களுக்கு போட்டியளிக்கும் விதமாக ஓலா எலெக்ட்ரிக் அதன் தயாரிப்புகளை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே ஓலாவுடன் சேர்ந்து இந்த வியட்நாம் நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல் டூ-வீலர்களுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. வின்ஃபாஸ்ட் தற்போது பேடண்ட் பதிவிற்காக விண்ணப்பத்திருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் திறன்களும் நம்மை வியக்க வைக்கும் வகையிலேயே உள்ளது.

இதன் ஹப் மோட்டார் 1.8 kW தொடங்கி அதிகபட்சமாக 3 kW பவர் வரை வெளியேற்றும் என கூறப்படுகின்றது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 78 கிமீ என்றும் கூறப்படுகின்றது. மேலும், இதன் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக கிளாரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் லித்தியம் அயன் பேட்டரி பேக்கிற்கு பதிலாக தற்போது எல்எஃப்பி பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் கெபாசிட்டி 3.5 kWh ஆகும். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 194 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். ஆனால், வாகனத்தில் 65கிலோவிற்கும் குறைவான எடையுள்ளவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதேவேளையில், மணிக்கு 30 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும்.

இந்த யுக்திகளை எல்லாம் கையாண்டால் மட்டுமே இந்த 194 கிமீ ரேஞ்ஜை அதனால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எல்எஃப்பி வகை பேட்டரிகள் அதிக எடைக் கொண்டவை அதேவேளையில், சற்றே விலை மலிவானவை. வீலை பொருத்த வரை 14 அங்குல வீலே முன் மற்றும் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக்குகளும் முன் மற்றும் பின் வீல்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் இருக்கைக்கு அடியில் 23 லிட்டர் வரையில் பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். இதன் இருக்கை உயரம் 760 மிமீ ஆகும். ஆகையால், நடுநிலை உயரமானவர்களாலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த அசௌகரியமும் இன்றி ஓட்டிக்கொள்ள முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *