32 ஆண்டுகள் கடும் சிறை.. அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம் – சீமான் உருக்கம்

இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் மறைவுக்கு நாம் தமிழர் சீமான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சாந்தன் மரணம்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதாகி, 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் சாந்தன்.

பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். நாடு திரும்ப அனுமதி பெற்ற நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

இந்த நிலையில் சாந்தனின் மறைவுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீமான் இரங்கல்
அவரது இரங்கல் பதிவில், ‘அன்புத்தம்பி சாந்தனைக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு.

பலகட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையில் இருந்தும், சிறைக் கொடுமையில் இருந்தும், தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்த பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று, சிறப்பு முகாம் எனும் சித்ரவதை முகாமில் அடைத்து சிறுக சிறுக சிதைத்து, இன்றைக்கு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியிருக்கிறது. அவரை உயிரோடு தாயகத்திற்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் வென்றுள்ளது இந்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் தான்’ என விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், ‘பெற்ற மகனை ஒரு முறையாவது உயிரோடு பார்த்துவிட வேண்டும் என 33 ஆண்டுகளுக்கும் மேலாக கவலை தோய்ந்த இதயத்தோடும், கண்கள் நிறைந்த கண்ணீரோடும் காத்திருந்த தாயின் வாழ்நாள் ஏக்கம், இறுதிவரை நிறைவேறவில்லை என்பது தான் வரலாற்றுப் பெருந்துயரம்.

தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இத்துயர்மிகுச் சூழலில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் திருச்சி சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ளவர்களையாவது திமுக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம்!’ என தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *