இந்திய கிரிக்கெட் வீரர்களே.. பிசிசிஐ அறிக்கையில் இதை கவனிச்சீங்களா.. ஜெய் ஷா கொடுத்த வார்னிங்!

பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள வருடாந்திர ஒப்பந்த அறிக்கையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

2024-25ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த அறிக்கையில் வழக்கமாக ஏ+, ஏ, பி மற்றும் சி என்று 4 கிராடுகள் மட்டுமே இடம்பெறும். மொத்தமாக 30 வீரர்களுக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அறிவிக்கப்படும். நடப்பாண்டிலும் பிசிசிஐ தரப்பில் 30 வீரர்களுக்கு தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கூடுதலாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு என்று ஸ்பெஷல் ஒப்பந்தம் பிசிசிஐ தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் காவேரப்பா ஆகியோருக்கு இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ-ன் இந்த செயல்பாடுகள் இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.

அதேபோல் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு பொறுப்புக்கு வந்ததில் இருந்து ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அத்தனை வீரர்களும் ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி பல்வேறு சாதனை படைத்தவர்கள் தான்.

இது ஐபிஎல் தொடரில் விளையாடினாலே இந்திய அணியில் விளையாடலாம் என்று நினைத்து செயல்பட்டு வரும் சில நட்சத்திர வீரர்களுக்கு இடியாக அமைந்துள்ளது. அதேபோல் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் தவிர்த்த இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்காததன் மூலமாக, ரஞ்சி டிராபி போட்டிகளில் ஆடுவதன் முக்கியத்துவத்தை பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்தம் அறிக்கையின் கடைசி பகுதியில், அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்படாத காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய வீரர்களுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *