குட் நியூஸ்..! இனி அரசு பேருந்துகளில் டிக்கெட் இப்படியும் எடுக்கலாம்..!
அரசு பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சமீப நாட்களாக பேருந்துகளில் UPI மூலம் பயணச்சீட்டு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். மேலும் இதற்கான சோதனை ஓட்டமும் பல பேருந்துகளில் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் (Electronic Ticketing Machine) மூலமாக பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் டெபிட் மற்றும் UPI மூலம் பயண டிக்கெட் பெற வசதியாக மின்னணு டிக்கெட் இயந்திரத்தையும் நடத்துனர்களிடம் வழங்கினார். தற்போது சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மட்டும் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் இன்னும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நடத்துநர்கள் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் வாயிலாக பயணிகளிடம் ரொக்கப் பணம், CARD மற்றும் UPI மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். இதனால் பேருந்துகளில் பயணிகள் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.