என்ன மனுஷன்யா நீ ? ரீல்ஸ்க்காக தெருநாய் ஒன்றை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஷகுர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இந்த இளைஞர், இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட வேண்டும் என்பதற்காக தெருநாய் ஒன்றின் ஒரு காலை மட்டும் பிடித்து கொண்டு, அதனை தலைகீழாக சுற்றியுள்ளார். வேகமாக நெருப்பு உள்ள பகுதிக்கு அருகேவைத்து நாயை சுழற்றுகிறார் அந்நபர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில் நாய் அலறும் சத்தம் நம் காதுகளையும் துளைக்கிறது.
“ரீல்ஸ் பதிவு செய்வதற்காக விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் இப்படியான கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியாது. நாயும் ஒரு உயிருள்ள ஜீவன்தானே.. இதனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பான தன்னுடைய பதிவில் உத்தரபிரதேச போலீசாரையும் இணைத்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார் பத்திரிகையாளர் லோகேஷ். அவரின் பதிவிற்கு கீழ் பதிலளித்துள்ள காவல்துறை, “இந்த விவகாரம் தொடர்பாக, போஜ்பூர் காவல் நிலையத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
#Ghaziabad रील रिकॉर्ड करने के लिए पशुओं संग क्रूरता ना काबिले बर्दाश्त है। वो भी जीव है ऐसा करने वाले पर कार्यवाई अपेक्षित है। यके घृणित कृत्य भोजपुर के शकूरपुर गांव के जफर द्वारा किया गया है। कार्यवाई अपेक्षित है @Uppolice @PetaIndia @surbhirawatpfa pic.twitter.com/oPEVxqZxB1
— Lokesh Rai (@lokeshRlive) February 26, 2024
இவ்விவகாரத்தில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று விலங்குநல ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தினை பதிவு செய்து வருகின்றனர். தெருநாய்கள் துரத்தியும், கடித்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ஒருபுறம் உயிரிழந்து வரும் நிலையில், மற்றொரு புறம் என்னவோ இப்படி ரீல்ஸ் மோகத்திற்காக வாயில்லாத ஜீவனை வஞ்சிக்கும் மனிதர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.