BCCI: ஷ்ரேயாஸ், இஷான் கிஷன் மட்டுமில்லை… இந்த 4 முக்கிய வீரர்களும் அதிரடி நீக்கம்!

Indian National Cricket Team: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில் (BCCI), அணி வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டது. வீரர்களின் இந்த பட்டியலை இந்திய சீனியர் ஆடவர் அணியின் தேர்வுக்குழு, பிசிசிஐக்கு பரிந்துரைக்கும். தற்போது தேர்வுக்குழுவின் தலைவராக முன்னாள் இந்திய அணியின் வீரர் அஜித் அகர்கர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, A+, A, B, C உள்ளிட்ட வகைமைகளில் வீரர்களை பிசிசிஐ (BCCI Contracts) வழக்கம்போல் அறிவித்தது. அதாவது, A+ தரவரிசையில் இருக்கும் வீரர்களுக்கு தலா ரூ.7 கோடியும், A தரவரிசையில் இருக்கும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், B தரவரிசையில் இருப்பவர்களுக்கு ரூ.3 கோடியும், C தரவரிசையில இருக்கும் வீரர்களுக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும். இது ஓர் ஆண்டுக்கான தொகையாகும். இது போக, ஒவ்வொரு போட்டிக்கான தொகையும் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.

எந்தெந்த பிரிவில் யார் யார்?

அந்த வகையில், 2023-24ஆம் ஆண்டுக்கான வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில், A+ தரவரிசையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். A தரவரிசையில் ரவிசந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கேஎல் ராகுல், சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். B தரவரிசையில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக, C தரவரிசையில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்ராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், சிவம் தூபே, ரவி பீஷ்னோய், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ரஜத் பட்டிதார் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல் ஆகியோர் விளையாடும்பட்சத்தில், அவர்களும் C தரவரிசையில் இடம்பிடிப்பார்கள்.

பிற வீரர்கள்…

ஏனென்றால், ஒரு வீரர் 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒடிஐ போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளை ஒரு குறிப்பிட்ட காலத்தில் விளையாடும்பட்சத்தில் அவர்கள் தானாகவே C தரவரிசையில் சேர்க்கப்படுவார்கள். இந்த நான்கு பிரிவு மட்டுமின்றி, வேகப்பந்துவீச்சாளர்களுக்கான தனிப்பரிவும் உள்ளது.

இதில், ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள், வித்வத் கவேரப்பா ஆகியோரை தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த முறை 2021-22ஆம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்டாலும், முதல்முறையாக இந்தாண்டுதான் வேகப்பந்துவீச்சாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன்…

இதில் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய விஷயமே இந்திய அணியின் (Team India) நட்சத்திர வீரர்களாக அறியப்படும் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer), இஷான் கிஷன் (Ishan Kishan) ஆகியோரை மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கியுள்ளது. அவர்கள் இருவரையும் கடந்த சில நாள்களாகவே சர்ச்சைகள் சுற்றி வந்த நிலையில், அவர்கள் மீது பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இவர்கள் மட்டுமின்றி கடந்தாண்டு ஒப்பந்தத்தில் இருந்த நான்கு முன்னணி வீரர்கள் இந்தாண்டின் ஒப்பந்தத்தில் கழட்டிவிடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் யாராவது ஒருவராவது இந்த பட்டியலில் இருந்து வெளியேறுவார்கள் என்றாலும், இம்முறை நீக்கப்பட்டுள்ள வீரர்களை பார்க்கும்போது நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்கள் கவலை கொள்வார்கள் எனலாம்.

இந்த 4 வீரர்கள்…

அதவாது, கடந்தாண்டு ஒப்பந்தத்தில் இடம்பெற்ற செதேஷ்வர் புஜாரா, ஷிகர் தவாண், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் இந்தாண்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. இதில், புஜாரா, தவாண், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வயது ஒரு காரணம் என்றாலும், 33 வயதான சஹால் இன்னும் சில போட்டிகளில் விளையாடும்பட்சத்தில் மீண்டும் ஒப்பந்தத்திற்கு திரும்ப வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. வீரர்களின் இந்த பட்டியலை இந்திய சீனியர் ஆடவர் அணியின் தேர்வுக்குழு, பிசிசிஐக்கு பரிந்துரைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *