தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல்..!
கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் போதைப்பொருள் கடத்தியதாக மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விசாரித்ததில் இதற்கு மூளையாக செயல்பட்டது ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.
டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியது. கடத்தல் சம்பவத்தில் தம்மை போலீஸ் தேடுவதால் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜாபர் சாதிக் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கட்சியிலிருந்து திமுக நீக்கி உள்ளது என்பதும் அவரை தேடும்பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி சீல் வைத்து சென்ற மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜாபர் சாதிக் திமுகவின் முக்கிய பிரபலம் என்பதும் திமுகவின் பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவருக்கும் அமீர் உள்பட சில திரை உலக பிரபலங்களுக்கும் நெருக்கமான நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.
டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக் நேரில் ஆஜாராக கூறப்பட்டு இருந்தது. அவர் ஆஜராகாத காரணத்தால் சென்னை மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மனை அதிகாரிகள் ஒட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.