திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் கைது.. நாட்டையே உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
மேற்கு வங்கத்தின் வடக்கு 24-பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சுந்தர்பன் டெல்டாவில் உள்ள சிறிய கிராமம் தான் சந்தேஷ்காலி. இந்த கிராமம் தான் தற்போது அம்மாநிலத்தில் பாஜக-திரிணாமுல் அரசியலின் மையமாக உள்ளது. ஆம்.. சந்தேஷ்காலி கிராமத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷேக் ஷாஜகான் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து ஷேக் ஷாஜகான் தலைமறைவானார். அவரை கைது செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 55 நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் இன்று (பிப்ரவரி 29) கைது செய்யப்பட்டார். இதுவரை இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சந்தேஷ்காலி சம்பவம் : இதுவரை நடந்தது என்ன?
ஜனவரி 5: ஷேக் ஷாஜகான் வீட்டில் அமலாக்க இயக்குனரகக் குழு சோதனை நடத்தச் சென்றது. அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று அதிகாரிகள் காயமடைந்தனர்.. அன்றைய தினம் ஷாஜகான் தலைமறைவானார்.
பிப்ரவரி 8: சில உள்ளூர் பெண்கள் துடைப்பம் மற்றும் கம்புகளை ஏந்தியபடி சந்தேஷ்காலியின் பிரதான சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்களான ஷிபா பிரசாத் ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தார் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பிப்ரவரி 9: போராட்டத்தில் ஈடுபட்டன் பெண்க ஹிபா பிரசாத் ஹஸ்ராவின் வீடு அவருக்கு சொந்தமான இடங்களை தாக்கினர். அவரது கோழிப்பண்ணைக்கு தீ வைத்தனர்.
பிப்ரவரி 10: உத்தம் சர்தார் கைது செய்யப்பட்டார்.
பிப்ரவரி 12: இந்த சம்பவம் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “சந்தேஷ்காலியில் இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்” என்று தெரிவித்தார்.
பிப்ரவரி 13: ஐபிஎஸ் சோம தாஸ் மித்ரா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு பெண் போலீஸ் குழு கிராமத்திற்குச் சென்றது.
பிப்ரவரி 14: சந்தேஷ்காலிக்கு செல்ல விடாமால் மாநில காவல்துறை தன்னை தடுத்ததால் தான் காயமடைந்ததாகக் பாஜக எம்பி சுகந்தா மஜும்தார் அளித்த புகாரின் பேரில் மேற்கு வங்காளத்தின் மூத்த அதிகாரிகளுக்கு லோக்சபா சிறப்புரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
பிப்ரவரி 17: ஹஸ்ரா மற்றும் சர்தார் மீது காவல்துறை கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை சேர்த்தது.
பிப்ரவரி 18: ஷிபா பிரசாத் ஹஸ்ரா கைது செய்யப்பட்டார்.
பிப்ரவரி 19: சந்தேஷ்காலியில் பெண்களுக்கு நடந்தது ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நினைவூட்டுவதாக பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி தெரிவித்தார்..
பிப்ரவரி 20: ஷேக் ஷாஜகானை சரணடைய சொல்ல வேண்டும் என்று கல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்குவங்க அரசுக்கு அறிவுறுத்தியது.
பிப்ரவரி 21: மேற்கு வங்க மாநில டிஜிபி ராஜீவ் குமார், சந்தேஷ்காலியில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் புகார்களையும் காவல்துறையினர் கேட்பார்கள் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிப்ரவரி 22: ஷாஜகான் கும்பலால் கையகப்படுத்தப்பட்ட சிறுவர் பூங்காவை சந்தேஷ்காலி மக்கள் விடுவித்தனர்.
பிப்ரவரி 23: சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணாமுல் தலைவர்களின் சொத்துக்களுக்கு உள்ளூர்வாசிகள் தீ வைத்ததால் புதிய போராட்டங்கள் வெடித்தன.
பிப்ரவரி 24: மாநில அமைச்சர்கள் அடங்கிய திரிணாமுல் குழு கிராமத்திற்குச் சென்று மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியளித்தது.
பிப்ரவரி 25: ஷாஜஹான் ஷேக்கை கட்சி பாதுகாக்கவில்லை என்று திரிணாமுல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறினார். ஷேக் மீதான விசாரணைக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பிப்ரவரி 26: ஷாஜகானை கைது செய்ய வேண்டும் என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியது. அவரை கைது செய்ய நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியது.
பிப்ரவரி 27: ஷாஜகானை கைது செய்ய தவறினால் 72 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தா மாநில அரசை கேட்டுக் கொண்டார்.
பிப்ரவரி 28: பழங்குடியினருக்கு சொந்தமான நிலம் எந்த நிலையிலும் பறிக்கப்பட மாட்டாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கிராமத்திற்கு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
பிப்ரவரி 29 : 55 நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் இன்று (பிப்ரவரி 29) கைது செய்யப்பட்டார்