Maha Shivaratri 2024 : சிவராத்திரி பற்றி அற்புதமான சில தகவல்கள் இதோ..!!
மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன் படி, இந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தான் மகா சிவராத்திரி கொண்டாடுகிறது. இந்த நாள் இந்து மத மக்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். மேலும் சிவராத்திரி அன்று சிவனை முழுமனதுடன் வழிப்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதுபோல் அந்நாளில், விரதமிருந்தால் தெரிந்த மற்றும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாகவே சிவனை, காலை வணங்கினால் நோய்கள் நீங்கும்… பகலில் வணங்கினால் அனைத்து விருப்பங்கள் நிறைவேறும்.. இரவில் வணங்கினால் மோட்சம் கிட்டும் என்று நம் பெரியோர்கள் சொல்லுவார்கள். எனவே, இப்போது சிவனுக்கு உகந்த இரவு என்று சொல்லக்கூடிய சிவராத்திரியை பற்றிய அற்புதமான சில தகவல்கள் குறித்து இங்கே நாம் பார்க்கலாம். அவை..
சிவராத்திரி பற்றிய தகவல்கள்:
நாம் “சிவ சிவ” என்று சொல்லும் போதே எல்லாவிதமான துன்பங்கள் திசை தெரியாமல் போகும் என்பது ஐதீகம். ‘சிவம்’ என்பதற்கு மங்களம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே ‘சிவராத்திரி’ ஆகும். அதுபோல, சிவராத்திரி அன்று ‘நமசிவாய’ என்னும் மந்திரத்தை சொல்லி சிவனை மனதில் நினைத்தால் எந்த தீமைகளும் நெருங்காது என்பது ஐதீகம்.
சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கியமான 6 அம்சங்கள்:
சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், ஆன்மா தூய்மைப்படும்.
அதுபோல், லிங்கத்திற்கு குங்குமம் வைத்தால், நல்லியல்பு, நல்ல பலன் கிடைக்கும்.
நைவேத்தியம் கொடுப்பது நீண்ட ஆயுள் மற்றும் அனைத்து விருப்பங்கள் நிறைவேறும்.
தீபமிட்டால், செல்வ வளம் கிடைக்கும். மற்றும் எண்ணெய் விளக்கேற்றினால் ஞானம் அடையலாம்.
வெற்றிலை கொடுப்பது, உலக இன்பங்களில் திருப்தியை அளிக்கும்.
ஐந்து சிவராத்திரிகள்:
மகா சிவராத்திரி: மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே, “மகா சிவராத்திரி” ஆகும். இந்த சிவராத்திரிக்கு “வருஷ சிவராத்திரி” என்று மற்றொரு பெயரும் உண்டு.
யோக சிவராத்திரி: திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும், அதாவது பகல் இரவு சேர்ந்த அறுபது நாழிகையும் அமாவாசை இருந்தால் அது தான் “யோக சிவராத்திரி” ஆகும்.
நித்திய சிவராத்திரி: வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி திதி என இருபத்து நான்கு நாட்களும் “நித்திய சிவராத்திரி” எனப்படும்.
பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு, பதினான்காம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி வரும் விரதமே, “பட்ச சிவராத்திரி” ஆகும்.
மாத சிவராத்திரி: மாதந்தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியே “மாத சிவராத்திரி” ஆகும்.