பொய் சொல்லிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயர் எங்கு இருந்தார் தெரியுமா? வெளிவந்த உண்மை.. பிசிசிஐ ஆப்பு சரிதான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட பின், ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு என்று பொய் கூறியது ஏன் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகள், 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியவர் ஸ்ரேயாஸ் ஐயர். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் 2 சதங்கள் உட்பட 530 ரன்களை விளாசி அசத்தியவர். ஆனால் 3 மாதங்களில் பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பின் ரஞ்சி டிராபி போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடுமாறு தேர்வு குழு தரப்பால் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் திடீரென முதுகு பிடிப்பு என்று கூறி ரஞ்சி டிராபி போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்த அடுத்த நாளிலேயே, என்சிஏ தரப்பில் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதப்பட்டது. அதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்த காயமும் இல்லை என்று தெரிய வர, அவர் ஏன் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடவில்லை என்ற கேள்வி எழுந்தது. அதுமட்டுமல்லாமல் முதுகு பிடிப்பு என்று ஸ்ரேயாஸ் ஐயர் எதற்காக பொய் கூறினார் என்று குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு என்று கூறிவிட்டு கேகேஆர் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றது தெரிய வந்தது. ஐபிஎல் தொடருக்கான கேகேஆர் அணி நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி முகாமில் ஈடுபடுவதற்காகவே ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில், ஸ்ரேயாஸ் ஐயரின் திறமை மீது இந்திய அணி நிர்வாகிகளுக்கோ, பிசிசிஐ-க்கோ எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் என்சிஏ அவரை ஃபிட் என்று கூறிய பின், டெஸ்ட் தொடருக்கு ஆயத்தமாகாமல் இருந்தால் என்ன செய்ய முடியும்? அவருக்கு எப்படி பிசிசிஐ ஒப்பந்தம் வழங்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.