கடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த 10 வீரர்கள்.. அதிருப்தியில் தோனி.. தவித்து நிற்கும் சிஎஸ்கே!
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் 10க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்பதால் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணை கடந்த வாரம் வெளியாகியது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது. ஓராண்டுக்கு பின் தோனி மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கவுள்ளதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தோனியின் ஜனவரி முதல் வாரத்தில் இருந்தே பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் சிஎஸ்கே பயிற்சி முகாம் தொடங்கும் பட்சத்தில் 15 நாட்கள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் இளம் வீரர்கள் பலரும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் மார்ச் 18ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. வங்கதேச அணியின் முஷ்டாஃபிகுர் ரஹ்மான், இலங்கை அணியின் பதிரானா மற்றும் தீக்சனா ஆகியோர் சிஎஸ்கே அணியில் விளையாடவுள்ளனர்.
இதனால் ஐபிஎல் தொடருக்கு 3 நாட்கள் முன்பாகவே இவர்கள் சிஎஸ்கே அணியுடன் இணைய வாய்ப்புள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல், சான்ட்னர் மற்றும் கான்வே ஆகியோர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னரே சென்னை வரவுள்ளனர். மார்ச் 12ஆம் தேதி டெஸ்ட் போட்டி முடிவடையும் பட்சத்தில் மார்ச் 15ஆம் தேதி அவர்கள் சென்னை வர வாய்ப்புள்ளது.
அதேபோல் சிவம் துபே காயம் காரணமாக என்சிஏவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பயிற்சி முகாமில் சிவம் துபே பங்கேற்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ரஞ்சி டிராபி இறுதிப்போட்டிக்கு மும்பை அணி தகுதி பெற்றால் ரஹானே, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்டோரும் மார்ச் 15ஆம் தேதியே பயிற்சி முகாமிற்கு திரும்புவார்கள்.
இதனால் 10க்கும் அதிகமான சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்பது சந்தேகம் தான். வழக்கமாக சீனியர் வீரர்களுடன் ஆடி வந்த சிஎஸ்கே அணி, எப்போதும் முதல் அணியாக பயிற்சி முகாமை தொடங்கும். ஏனென்றால் யாருக்கும் எந்த சர்வதேச போட்டிகளும் இருக்காது. ஆனால் இம்முறை சிஎஸ்கே அணியில் அதிகளவில் இளைஞர்கள் இருப்பதால், சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தோனியும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.