70,352 கோடி மதிப்பு.. இந்தியர்களின் பொழுதுபோக்கு இனி அம்பானியிடம்! இணைந்த ரிலையன்ஸ், வால்ட் டிஸ்னி
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய ஊடக நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் டிஸ்னி இந்திய ஊடகங்கள் இணைப்பால் உருவாகி இருக்கக்கூடிய கூட்டு நிறுவனத்தின் மதிப்பு 70 ஆயிரத்து 352 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது . மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இணைப்பின் மூலம் இந்தியர்களின் பொழுதுபோக்கு அம்பானியின் வசம் சென்றுள்ளது.
ரிலையன்ஸ் ஆதிக்கம்: ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் வால்ட் டிஸ்னியின் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, மொத்தமாக இந்த கூட்டு நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். ஏனெனில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 63.16 விழுக்காடு பங்குகளையும் டிஸ்னி நிறுவனம் 36.84 பங்குகளையும் கொண்டுள்ளது. மொத்த பங்குகளில் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 16.34% மற்றும் வியாகாம் 18 46.82% பங்குகளையும் வைத்திருக்கும் என இந்த ஒப்பந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டு அல்லது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இது முழுமையான கூட்டு நிறுவனமாக மாறும் என்னும் ஒழுங்குமுறை விதிகளின் படி பணிகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிடியில் 11,500 கோடி முதலீடு: இந்த இணைப்பில் மிகப்பெரிய லாபம் அடைய போவது ரிலையன்ஸ் நிறுவனம் தான். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் உள்ள படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை ஜியோவின் ஓடிடி தளங்களில் இணைக்கலாம் அல்லது அவற்றை காண்பதற்கான சிறப்பு வசதி ஏற்படுத்தப்படலாம். இது மட்டுமின்றி ஓடிடி தளத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 11,500 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளது. குறிப்பாக இந்த இணைப்பின் மூலம் விளையாட்டு நிகழ்வுகளை நேரலை செய்தே ஜியோ கல்லா கட்டி விடும். இந்த இணைப்பு மூலம் ஜியோ – ஹாட் ஸ்டார் ஆகிய இரண்டு பெரிய ஓடிடி தளங்கள் ஒன்றிணைகின்றன. எனவே பொழுதுபோக்குக்கு இனி பஞ்சம் இருக்காது.
இந்திய ஊடகத்தில் மிகப்பெரிய பங்கு: ரிலையன்ஸ் – வால்ட் டிஸ்னி இணைப்பு மூலம் உருவாகி இருக்கும் கூட்டு நிறுவனம் இந்தியாவின்மிகப்பெரிய ஊடக நிறுவனமாக இருக்கும். பல மொழிகளில் ஒளிபரப்பாகும் 100 சேனல்கள், இரண்டு முக்கிய ஓடிடி தளங்கள் ஆகியவை இதற்கு சொந்தமாகும். பணத்தை கொட்டி கொடுக்கும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு என இரண்டுமே ரிலையன்ஸின் வசம் சென்றுள்ளது. எனவே இந்தியர்களின் பொழுதுபோக்கையும், நுகர்வையும் தீர்மானிக்கும் இடத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது என கூறினால் மிகையாகாது.
வியாகாம் 18 நிறுவன ஊடகங்கள், கலர்ஸ், ஸ்டார்பிளஸ், ஸ்டார் கோல்டு ஸ்போர்ட் 18, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என அனைத்துமே ஒரு குடைக்குள் வந்துவிட்டன. டிஸ்னி நிறுவனம் கடந்த 2019ல் ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் டிவியை 71 பில்லியன் டாலருக்கு வாங்கியது. 2019இல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பியதன் மூலம் ஹாட் ஸ்டார் பெரிய வளர்ச்சி கண்டது. ஆனால் 2020இல் கிரிக்கெட் காண்பதற்கு சந்தா கோரியதால் பயனாளர்கள் அதை விரும்பவில்லை. 2022இல் ஜியோ நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி இலவசமாக ஒளிபரப்பு செய்தது. இதனால் பல லட்சம் சப்ஸ்கிரைபர்கள் ஹாட் ஸ்டாரில் இருந்து ஜியோவுக்கு சென்றனர். ஆனால் இனி எல்லாமே ஒரே நிறுவனம் தான்.