சமையலில் தயிர் பயன்படுத்தலாமா? பயன்படுத்தினால் என்னவாகும் தெரியுமா?
ப்ரோபயாடிக் சத்து நிறைந்த தயிரானது நாம் சமைக்காமலேயே பயன்படுத்துகின்ற உணவுப் பொருள்தான். எனினும், தயிரை பயன்படுத்தி சில உணவுப் பொருள்களை சமைக்கவும் செய்கிறோம். மோர் குழம்பு, பிரியாணி சமையலில் புளிப்புச் சுவைக்காக சேர்ப்பது, இறைச்சிகளை எளிதாக வேக வைக்க தயிர் சேர்ப்பது என்று பல வகைகளில் நாம் இதை சமையலில் சேர்த்துக் கொள்கிறோம்.
ஆனால், தயிரை சமையலில் சேர்க்கவோ, சூடு செய்யவோ கூடாது என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது. இவ்வாறு தயிரை சூடுபடுத்தினால் அல்லது சமையலில் சேர்த்துக் கொண்டால் என்ன ஆகும்? நாம் சாப்பிடுவதற்கு அது பாதுகாப்பான உணவாக இருக்குமா? என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தயிரில் உள்ள சத்துகள் : பாலின் தன்மை, கால்சியம், ப்ரோபயாடிக் சத்து போன்றவற்றை தயிர் கொண்டிருக்கிறது. தினசரி தயிர் சாப்பிட்டு வந்தால் நம் எலும்புகள் பலம் அடையும். ப்ரோபயாடிக் சத்து இருப்பதால் நம் குடலில் நல்ல நுண்ணுயிர்கள் பெருகும். அதனால் செரிமானம் மேம்படும். தயிரில் உள்ள புரதம் நம் தசை வளர்ச்சிக்கும், தசையை மீட்டுருவாக்கம் செய்யவும் பயன்படும். அனைத்து வயதினருக்கும், எல்லா காலத்திலும் சிறந்த உணவுப் பொருளாக தயிர் உள்ளது.
தயிரில் உள்ள வைட்டமின் பி12 உள்ளிட்ட சத்துக்கள் ஒட்டுமொத்தமாக நம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மற்றும் ஆற்றலை கொடுக்கும்.
தயிரை சூடுபடுத்துவது பாதுகாப்பானதா? தயிரை சூடுபடுத்தினால் அதன் தன்மை மாறும் என்று ஆயுர்வேதமும், நவீன மருத்துவமும் தெரிவிக்கிறது. குறிப்பாக அதன் ஊட்டச்சத்து அளவுகள் குறைகின்றன.
புரத மாற்றம் : தயிரை சமைக்கும்போது அல்லது சூடு செய்யும்போது, அதன் புரதத்தன்மையை அது இழக்கிறது. இதனால் தயிரில் உள்ள இயற்கையான ஊட்டச்சத்துக்கள் குறையலாம்.
தண்ணீர் வெளியீடு : தயிரை சூடுபடுத்தும்போது, அதில் உள்ள நீர்ச்சத்து தனியாக பிரிந்து வந்துவிடும். இதனால், அதன் ஈரப்பதம் காணாமல் போகும். அதைத் தொடர்ந்து, தயிர் மிக கெட்டியாக மாறும். இதனால் அதன் தன்மை மற்றும் சுவை மாற்றம் அடையும்.
பதப்படுத்துதல் : தயிரை பதப்படுத்தி வைக்கும் விதமாக சிலர் சூடு செய்கின்றனர். ஏனென்றால் தயிரை சூடு செய்யும்போது, அதில் ஏதேனும் ஆபத்தான பாக்டீரியா இருந்தால் கொல்லப்படும். தயிரை ஏதேனும் ஒரு உணவில் உப பொருளாக சேர்ப்பது என்றால் அதை சூடுபடுத்த வேண்டும்.
மனம் மாறும் : தயிரை சூடு செய்வதால் அதன் இயற்கையான மனம் மாறும். தயிரை நாம் பச்சையாக சாப்பிடுவதற்கும், சூடு செய்து சாப்பிடுவதற்குமான சுவை, மனம் மாற்றம் அடையும். ஆனால், சமையலில் தயிர் பயன்படுத்துவதால் கிடைக்கும் சுவையை சிலர் விரும்புகின்றனர்.