சீட்டுக்காக காங்கிரஸ் யாரிடமும் கெஞ்சாது.! தனியாக போட்டியிடுது தொடர்பாக தலைமை முடிவு செய்யும்-செல்வப்பெருந்தகை
பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தையடுத்து அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்ச்சி சென்னை சத்ய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக அரசு இந்தியா கூட்டணி மீது அமலாக்கதுறை, சி.பி.ஐ வைத்து மிரட்ட நினைக்கின்றனர். இந்தியா கூட்டணியில் யாரேனும் இணைந்தால் அவர்கள் மீது உண்மைக்கு புறம்பான வழக்கு தொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
திமுகவோடு மோதலா.?
தமிழகம் வந்த பிரதமர் மோடி திடீரென எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது பற்றாக பேசி வருகிறார். அதிமுகவுக்கு மாயவலை வீசுகிறார்களா என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். கடந்த தேர்தலை விட திமுக கூட்டணியில் அதிக இடங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியா? தனித்து போட்டியா?என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்கிறது.
அதன்படி தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் அகில இந்திய வழிகாட்டுதலோடு முடிவு செய்யும். கடந்த தேர்தலில் வழங்கிய 9 தொகுதிகளுக்கு குறைவான இடங்களை வழங்கினால் தனித்து போட்டியிடுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.
யாரிடமும் கெஞ்சமாட்டோம்
இன்னும் இரண்டு வாரங்களில் மல்லிகார்ஜின கார்கே சென்னை வர உள்ளதாக தெரிவித்தவர், கூடிய விரைவில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறினார். தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் இருக்கிறது என தெரிவித்தார். அகில இந்திய தலைமை வழிகாட்டுதலோடு தொகுதிப்பங்கீட்டை உறுதி செய்வோம் என தெரிவித்தார்.
காங்கிரஸ் எந்த காலத்திலும் யாருக்காகவும் சீட்டுக்காக ஏங்கியதில்லை. சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம். 2014ல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாடு குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். தமிழகத்தில் தொகுதி ஒப்பந்தம் செய்ய அவகாசம் இருக்கிறது எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.