இதுதான் புரட்சி.. மத்திய அரசு தந்த மாஸ் ஒப்புதல்.. இந்தியாவில் அமையும் முதல் செமிகண்டக்டர் ஆலை! செம
டெல்லி: நாட்டின் முதல் செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன்படி டாடா மற்றும் தைவானின் பவர்சிப் நிறுவனம் இணைந்து இந்த தொழிற்சாலையை குஜராத் மாநிலத்தின் தோலேராவில் அமைக்கின்றன.
ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், இதர மின்னணு சாதனங்கள் இயங்க சிப்கள் மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த சிப்களை தயாரிக்க செமிகண்டக்டர்கள் அவசியம். கொரோனா தொற்று காலத்தில் தொடங்கி தற்போது வரை இந்தியாவின் மின்னணு சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால், செமிகண்டக்டர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே இதனை சரிசெய்ய செமிகண்டக்டர்கள் தயாரிப்பு ஆலைகள் நிறுவ தனியார் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இதன் தொடர்ச்சியாகதான் குஜராத் மாநிலத்தின் தோலேராவில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
“இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் ஆலையை, ‘டாடா எலக்ட்ரானிக்ஸ்’ மற்றும் தைவானின் ‘பவர்சிப் செமிகண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் கார்ப்பரேஷன்’ இணைந்து ரூ.91,000 கோடியில் குஜராத்தில் தொடங்குகிறது. இது ஒவ்வொரு மாதமும் சுமார் 50,000 வேஃபர்களை(wafer) தயாரிக்கும். இந்த ஆலை நேரடியாக சுமார் 26,000 பேருக்கு நேரடியாகவும், 1 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலையை வழங்கும்.
இந்த ஆலை 28 nm தொழில்நுட்பத்துடன் கூடிய உயர் செயல்திறன் கம்ப்யூட் சிப்களை உற்பத்தி செய்யும். மின்னுணு கருவிகளில் மட்டுமல்லாது, மின்சார வாகனங்கள், பாதுகாப்பு துறையில் பயன்படுத்தும் கருவிகளுக்கு ஏற்றார்போல சிப்கள் உருவாக்கப்படும்.
செமிகண்டக்டர் உற்பத்திக்கான பொதுவான காலம் 3-4 ஆண்டுகளாகும். ஆனால், இந்தியா அதை சீக்கிரமாகவே உற்பத்தி செய்யும். ஏனெனில் இந்தியா அசெம்பிளி, டெஸ்டிங், மார்க்கிங் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பத்தை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இந்த துறைகளில் சீரான வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, செமிகண்டக்டர் உற்பத்தி இந்தியாவில் விரைவானதாக இருக்கும்.
குஜராத்தில் டாடா நிறுவனத்தை தவிர, ரூ.7,600 கோடி செலவில் ‘சிஜி பவர்’ மற்றும் ஜப்பானின் ‘ரெனேசாஸ்’ நிறுவனமும் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைக்கிறது. இந்த நிறுவனங்கள் மைக்ரோகண்ட்ரோலர்கள், அனலாக், பவர் மற்றும் சிஸ்டம்-ஆன்-சிப் தயாரிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிறுவனங்கள் தொழில்துறைக்கான செமிகண்டக்டர்களை ஒவ்வொரு நாளும் சுமார், 1.5 கோடி என்கிற அளவில் உற்பத்தி செய்யும்.
குஜராத் தவிர அசாமிலும், ரூ.27,000 கோடியில் டாடா செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் பிரைவேட். லிமிடெட்டின் சிப் அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் யூனிட்டை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இது, தொலைத்தொடர்பு துறைக்கான செமிகண்டக்டர்கள் ஒவ்வொரு நாளும் 4.8 கோடி என்கிற அளவில் உற்பத்தி செய்யும்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் இனி வரும் காலங்களில் இந்தியா, தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத நாடாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.