இன்று மாஸ்கோவில் அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு..!
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வந்தவர் அலெக்சி நவால்னி (47). ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அலெக்சி நவால்னி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த தாக்குதல் ரஷ்ய அதிபரால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வேதிப்பொருள் தாக்குதலால் கோமா நிலைக்கு சென்ற நவால்னி ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் குணமடைந்த நவால்னி கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி மீண்டும் ரஷ்யா வந்தார். மாஸ்கோ விமானநிலையம் வந்து இறங்கிய நவால்னியை ரஷ்ய போலீசார் கைது செய்தனர். 2014-ம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கில் நவால்னி கைது செய்யப்பட்டதாக ரஷ்ய போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நவால்னிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மாஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரது உயிரிழப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாட்டு மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து உள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே அலெக்சி நவால்னியின் உடலை ரஷ்ய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக நவால்னியின் மனைவி மற்றும் தாயார் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த நிலையில், அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு வரும் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து நவால்னியின் செய்தி தொடர்பாளர் கிரா யார்மிஷ் கூறுகையில், மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று மார்ச் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும், பின்னர் அருகில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.