பிரதமர் மோடி திறந்து வைத்த கோவிலில் இன்று முதல் பொது தரிசனத்துக்கு அனுமதி..!
அபுதாபியில் துபாய் – அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவிற்கு அருகில் அபு முரீகா பகுதியில் 27 ஏக்கர் பரப்பளவில் ரூ. 700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்து கோவிலை பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி திறந்து வைத்தார். அபுதாபியின் அல் ரபா என்ற இடத்தில் இருக்கும் அபு முரேகா என்ற பகுதியில்தான் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயில் கட்டுவதற்கான இளஞ்சிவப்பு வண்ண கற்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது.இந்த கற்கள் 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கும் தன்மை கொண்டது. 108 அடி உயரமும், 262 அடி நீளமும், 180 அடி அகலமும் கொண்டதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ. 904 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவே அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கற்கோவிலாகும். பாப்ஸ் எனப்படும் சுவாமி நாராயண் அமைப்பு மூலம் கட்டப்பட்ட இக்கோவிலில் கடந்த 15-ம் தேதி முதல் இன்று வரை முன்பதிவு செய்த வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாளை மார்ச் 1-ம் தேதி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் அதிகாரிகள் கூறி உள்னர். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். வாரந்தோறும் திங்கட்கிழமை கோவில் மூடப்பட்டிருக்கும் என கோவில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் அபுதாபி – குவெய்பாத் ஹைவேயில் (E11) இருந்து அல் தாஃப் சாலை (E 16) வழியே செல்ல வேண்டும். துபாய்க்கும் – அபுதாபிக்கும் இடையே இந்த கோயில் அமைந்துள்ளது.துபாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இந்து சமூக மக்கள் கணிசமாக இருக்கும் நிலையில் இந்த கோயில் மத நல்லிணக்கத்தை பேணும் இடமாக அமையும் என்று ஆன்மிக தலைவர்கள் கூறியுள்ளனர்.