3 ஆண்டுகளில் 240 நாட்கள் பரோலில் விடுதலை : ஹரியானா உயர்நீதிமன்றம் காட்டம்..!
ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் ஏற்கெனவே ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா சவுதா அமைப்பில் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். பெண் சீடர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மேலாளர் ரஞ்சித் சிங் வெளியில் பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்துள்ளார். அதனால், ரஞ்சித்தை சிங்கை கொலை செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் மற்றும் அவரது கூட்டாளிகள் கிருஷ்னண் லால், ஜஸ்பிர் சிங், அவ்தார் சிங், சப்தில் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
குர்மீத் கடந்த ஆண்டு தொடக்கம் முதல் பல முறை பரோல் பெற்றுவிட்டார். ஹரியாணா மாநில சிறை நன்னடத்தை விதிகளின்படி குற்றவாளிகளுக்கு பரோல் வழங்க வழிவகை இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகள், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைதாபவர்களை பரோலில் விட அனுமதியில்லை. இருப்பினும் குர்மீத் சிங் மட்டும் அடிக்கடி பரோலில் வெளியாவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இனி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பரோல் வழங்கக் கூடாது என ஹரியானா சிறைத்துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது மேலும் குர்மீத் ராம்-ஐ, கடந்த 3 ஆண்டுகளில் 240 நாட்கள் பரோலில் விடுதலை செய்த ஹரியானா அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளது உயர்நீதிமன்றம்.