இனி ரூ.40 செலுத்தி 4 மணி நேரம் சென்னைக்குள் பயணம் செய்யலாம்..!
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முதல்வர் உத்தரவுக்கு இணங்க, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தலைமை செயலகத்தில், மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40 கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான செயலியின் வாயிலாக, நிர்வாகத்தின் மூலமாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணியாளர்கள் விடுப்பு எடுத்திட விண்ணப்பித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள், ரூ.40 கூடுதலாக கட்டணம் செலுத்தும்பட்சத்தில், கால விரையமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும், சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும், 4 மணி நேரத்திற்குள், 2, 3 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடையும் வகையில் இத்திட்டம் இன்று மார்ச் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.