பிரதமர் மோடி வரும் 4-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்..!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த சூழலில், தமிழக பா.ஜனதா பாராளுமன்ற தேர்தல் களத்தில் பரபரப்பாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் வருகிற (மார்ச்) 4-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு மீண்டும் வருகை தர உள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பா.ஜனதா சார்பில் நடத்தப்பட உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்ட ஏற்பாடு பணிகளில் தமிழக பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநாட்டு பந்தல் அமைப்பதற்கான பூமி பூஜையும் போடப்பட்டது. மேலும், பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அரும்பாக்கத்தில் உள்ள பாராளுமன்ற தேர்தல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.