திரும்ப வரும் ஜஸ்ப்ரித் பும்ரா – 5ஆவது போட்டியிலிருந்தும் விலகிய கேஎல் ராகுல்!
இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இதுவரையில் நடந்த 4 போட்டிகளில் இங்கிலாந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று 3-1 என்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போன்று வரும் 7ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பும்ராவிற்குப் பதிலாக ஆகாஷ் தீப் அணியில் அறிமுகம் செய்யப்பட்டு 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த நிலையில், தான் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் 5ஆவது போட்டிக்கு முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை தொடங்க இருக்கிறார்.
மேலும், 2ஆவது டெஸ்ட் போட்டி முதல் காயம் காரணமாக அணியில் இடம் பெறாத கேஎல் ராகுல் முழுமையான உடல் தகுதி காரணமாக 5ஆவது போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். இது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து கூறியிருப்பதாவது: கேஎல் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அவரை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பும்ரா மீண்டும் தரம்சாலா போட்டிக்காக அணியில் இடம் பெறுகிறார். மேலும், அணியில் இடம் பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்கு எதிராக நடக்கும் அரையிறுதிப் போட்டிக்காக தமிழ்நாடு அணியில் இணைய உள்ளார். இந்தப் போட்டி நாளை தொடங்குகிறது. ரஞ்சி டிராபி தொடர் முடிந்த பிறகு 5ஆவது போட்டியில் தேவைப்படும் போது இணைவார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று தனது குதிகால் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட முகமது ஷமி விரைவில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியை தொடங்குவார் என்று கூறப்பட்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Team India 5th Squad:
இந்திய அணி 5ஆவது டெஸ்ட்: ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.