Panguni Uthiram 2024 : பங்குனி உத்திரம் எப்போது..? அதன் சிறப்புகள் பற்றி தெரியுமா..??
உத்திரம் நட்சத்திரம் ஒவ்வொரு மாதம் வந்தாலும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்திற்கு தனிசிறப்புண்டு. ஏனெனில், இந்த மாதத்தில் தான் நிறைய தெய்வத் திருமணங்கள் நடைபெறும். அது மட்டுமின்றி, தமிழ்க்கடவுள் முருகனை மனதில் நினைத்து வழிபடும் நாள் இதுவே. பங்குனி உத்திரம் என்பது, தமிழ் மாதத்தில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரமான உத்திரம் என இவை இரண்டும் சேர்ந்த நாள் ஆகும். இந்நாளில் தான் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுப்பது, அபிஷேகம் செய்வது என அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்திடுவார்கள்.
பங்குனி உத்திரம் 2024 தேதி மற்றும் நேரம்: பங்குனி உத்திரம் மார்ச் 24 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. தமிழக இந்து மத பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று இந்த விழாவை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுவார்கள்.
உத்திரம் நட்சத்திரம் திதி ஆரம்பம் : மார்ச் 24, 2024 அன்று காலை 07: 35
உத்திரம் நட்சத்திரம் திதி முடிவு : மார்ச் 25, 2024 அன்று இரவு 10: 38
சிவனுக்கும் பங்குனி உத்திரத்திற்கும் என்ன தொடர்பு?
சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் தேவர்கள் கலங்கி நின்றனர். அப்போது அவர்களுக்கு ஆறுதலாக சிவன் தேவியை இந்த தினத்தில் தான் மணந்தார். எனவே, தான் ஒவ்வொரு பங்குனி உத்திரம் அன்றும் திருத்தலங்களில் இருக்கும் சிவனையும் பார்வதியையும் அலங்கரித்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்கள் இருவரையும் அலங்கரித்த பல்லக்கில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
கல்யாணசுந்தர விரத பலன்கள்:
பங்குனி உத்திரம் அன்று கல்யாணசுந்தர விரதம் இருந்து சிவனை நினைத்து மனதார வழிபட்டால், திருமணம் தடை நீங்கி, விரைவில் நல்ல வரன் அமையும் மற்றும் திருமண வாழ்க்கை ரொம்பவே, மகிழ்ச்சியாக இருக்கும். அதுமட்டுமின்றி, மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திரம் அன்று கல்யாணசுந்தர விரதமிருந்து சிவனை வழிபட்டால், அடுத்த பிறவியில் தெய்வநிலையை அடைய முடியும் என்பது ஐதீகம்.
உத்திரம் நட்சத்திரத்தின் சிறப்பு:
இந்து மதத்தில் ஒவ்வொரு சுபகாரியங்களையும் உத்திரம் நட்சத்திரத்தில் தான் செய்வார்கள்.. இதனால் தான் பல தெய்வங்களின் திருமணங்கள்கூட பங்குனி உத்திரத்தில் நடைபெற்றது.. சரி இப்போது எந்த தெய்வங்களுக்கெல்லாம் பங்குனி உத்திரம் அன்று திருமணம் நடைபெற்றது என்பதை பார்க்கலாம்.
பார்வதி-பரமேஸ்வரர், ஶ்ரீராமர்-சீதை, பரதன்-மாண்டவியின், லட்சுமண-ஊர்மிளை, சத்ருக்ணன்-சுருதகீர்த்தி, முருகப் பெருமான்-தெய்வானை, ஆண்டாள்-ரங்கமன்னார், அகத்தியர்- லோபாமுத்திரை, ரதி-மன்மதன், இந்திரன்-இந்திராணி, நந்தி-சுயசை, சாஸ்தா-பூரணை புஷ்கலை, சந்திரன்-27 நட்சத்திர மங்கையர்… இந்த அனைத்து திருமணங்களும் பங்குனி உத்திரத்தில் தான் நடைபெற்றது.