உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கேப்பை களியை குக்கரில் எப்படி செய்வது.?
நமது முன்னோர்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தார்கள். அதனால் தான் அவர்கள் அதிக வயதுடன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அதில் முக்கியமான ஒன்று அவர்கள் தினமும் காலையில் சாப்பிடும் ஆரோக்கியம் நிறைந்த கேப்பைக் களி.
உடலுக்கு பலம் தரும் தானிய வகைகளில் முக்கியமானது கேழ்வரகு. இதில் செய்யப்படும் கேப்பை களியை உண்டுதான் முன்னோர்கள் உடலை இரும்பு போல வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட கேப்பை களியை எப்படி குக்கரில் செய்வது என இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்,
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் கேழ்வரகு மாவை சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளுங்கள்.
பிறகு ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
தண்ணீர் நன்றாக சூடானதும் கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவை அதில் ஊற்றி நன்றாக கைவிடாமல் கலந்துவிட வேண்டும். அப்போது தான் கட்டிகள் வராமல் இருக்கும்.
கேழ்வரகு சற்று கெட்டியான பதத்துக்கு வந்ததும் அடுப்பை அனைத்து மாவில் சிறு கட்டிகள் கூட இல்லாமல் நன்றாக கலந்துவிட்டு கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் குக்கரை வைத்து அதில் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் கேழ்வரகு மாவு கலந்து வைத்துள்ள கிண்ணத்தை வைத்து குக்கரை மூடி கொள்ளவும்.
குக்கர் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து பிரஷர் அடங்கும் வரை வெயிட் செய்யவும்.
பிரஷர் அடங்கியவுடன் குக்கர் மூடியை திறந்து உள்ளே இருக்கும் கேழ்வரகு மாவு கிண்ணத்தை வெளியே எடுத்து நன்றாக கலந்து விட்டு அனைவருக்கும் பரிமாறுங்கள்.
ஆரோக்கியமான இந்த கேழ்வரகு களியுடன் கருவாட்டு குழம்பு, மீன் குழம்பு, வேர்க்கடலை சட்னி போன்றவற்றை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்.