ஆடுஜீவிதம் படத்தை லாரன்ஸ் ஆஃப் அரேபியா படத்துடன் ஒப்பிட்டு புகழ்ந்த ரஹ்மான்
தி கோட்லைஃப்… அதாவது ஆடுஜீவிதம். 2008 ல் எழுத்தாளர் பென்யாமின் தனது ஆடுஜீவிதம் நாவலை மலையாளத்தில் வெளியிட்ட போது, வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. அது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு, தமிழ் வாசகர்களின் வரவேற்பையும் பெற்றது. இந்த நாவலை தி கோட்லைஃப்… ஆடுஜீவிதம் என்ற பெயரில் மலையாளப்பட இயக்குநர் பிளெஸ்ஸி திரைப்படமாக எடுத்துள்ளார்.
அரேபிய பாலைவனத்தை மையப்படுத்திய சர்வைவல் ட்ராமா திரைப்படமான இதில் பிருத்விராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்காக உடல் இளைத்து, முற்றிலும் மாறுபட்டத் தோற்றத்தில் தனது நடிப்பு வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்தின் இன்னொரு சிறப்பாக அமைந்துள்ளது.
பல வருடங்கள் தயாப்பில் இருந்த படம், கோவிட் பெருந்தொற்றின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. மார்ச் 10 ம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட்டு, மார்ச் 28 படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திமொழிகளில் வெளியிடுகின்றனர்.
முன்னதாக, படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் தொடங்கப்பட்டது. இதன் அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், டேவிட் லீன் இயக்கத்தில் 1962 ல் வெளியாகி, இன்றும் கல்ட் கிளாஸிகாக கொண்டாடப்படும், லாரன்ஸ் ஆஃப் அரேபியா படத்துடன் தி கோட்லைஃப்… ஆடுஜீவிதம் படத்தை ஒப்பிட்டு புகழ்ந்தார். அத்துடன், “தி கோட்லைஃப் – ஆடுஜீவிதம் திரைப்படம் ஒரு வகையில் இசையமைப்பாளரின் திரைப்படம். மொத்த டீமும் இந்தப் படத்திற்காக தங்கள் ஆன்மாவைக் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த உழைப்பைப் பார்த்தபோது, சினிமா மீதான எனது நம்பிக்கை மீண்டும் உறுதியானது” என்றார்.
தி கோட்லைஃப் – ஆடுஜீவிதம் படத்தை இயக்கியிருக்கும் பிளெஸ்ஸி மலையாளத்தின் முக்கியமான இயக்குநர். இவரது முதல் படம் காழ்ச்சா, இரண்டாவது படம் தன்மாத்ரா ஆகியவை மலையாளத்தின் மரியாதைக்குரிய படங்களாக இன்றும் திகழ்கின்றன. ஆடுஜீவிதம் படத்துக்காக பல வருட உழைப்பை பிளெஸ்ஸி தந்துள்ளார். படம் உலக அளவில் கவனிக்கப்படும் என்று படக்குழு உறுதியாக நம்புகிறது.